Published : 13 Dec 2022 06:41 AM
Last Updated : 13 Dec 2022 06:41 AM
திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் பின்தங்கியுள்ள கிராமங்களை இணைக்கும் பல சாலைகளில் ஒரு சில பகுதிகள், காப்புக்காடு பகுதிகளாக உள்ளன. இதனால், அந்த கிராமச் சாலைகளை பராமரிக்கவோ, செப்பனிடவோ அல்லது சீரமைக்கவோ, வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், வனத்துறையினரிடம் எளிதாக அனுமதி கிடைக்காத காரணத்தால், அந்த சாலைகள் சீரழிந்து, பெரும் பள்ளத்தாக்குகளாக மாறி உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பல சாலைகள் உள்ளன.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலை அமைக்க, வனச்சட்டம், 1980-ன்படி தொடர்புடைய அரசு துறை சார்பில், இணைய வழியாக விண்ணப்பித்து, அது முறையாக மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அவர் ஆய்வுசெய்து, அதன்பின் வன காப்பாளருக்கு அறிக்கை அனுப்பி, பிறகு அவர் ஆய்வு செய்து, குறிப்புகள் வைத்து தலைமை வனக்காப்பாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு செயலாளருக்கு அனுப்பி, அவர் ஒப்புதல் அளிக்கும் அதிகார அனுமதி வரையறைக்குள் இருந்தால் அவர் சாலைக்கு அனுமதி அளிப்பார். இல்லையெனில், அதனை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி, அதற்கு பின்னரே அனுமதி பெற வேண்டும்.
இந்த அனுமதியும் முழுமையானது அல்ல. இது கிடைத்ததும் மேல் வரிசையில் சென்ற கோப்பு அதே வரிசையில் கீழே வந்து, மாவட்ட வன அலுவலர் அந்த அனுமதி வேண்டிய அரசு துறையிடம் அனுமதி கோரிய பரப்பளவுக்கு ஈடாக மாற்று இடமோ, அல்லது உரிய தொகையோ செலுத்த கோருவார். அதனை நிறைவேற்றியதும் கோப்பு மீண்டும் மேல் வரிசை சென்று ஒப்புதல் பெற்று, மீண்டும் கீழ் நிலை வந்து, மாவட்ட வன அலுவலர், 20 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்குவார். இந்த நடைமுறையில் கோப்புகள் பல ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் அவல நிலை இருந்து வருகிறது.
திருப்போருரில் உள்ள சாலைகள்: சோனலூர் - போலச்சேரி சாலை, பெரிய இரும்பேடு சாலை, இள்ளலூர் – செங்காடு சாலை, மடையத்தூர் சாலை, தையூர் - காயார் - சோழவந்தாங்கல் சாலை, மாம்பாக்கம்-கொளத்தூர் சந்திப்பு முதல் கண்ணாபுரம் வரை, மேலக்கோட்டையூர் சாலை, காயார் - கல்வாய் சாலை, பொன்மார்–போலச்சேரி சாலை, செம்பாக்கம்–அச்சரவாக்கம் சாலை, சிறுங்குன்றம்–மருதேரி, பெருந்தண்டலம் காலனி சாலை, தண்டர- ஓரத்தூர்– நெம்மேலி சாலை, சிங்கபெருமாள்கோவில் ரெட்டிக்குப்பம்–மருதேரி சாலை ஆகியவை வருகின்றன.
இதுதவிர செம்பாக்கம்–வெண்பேடு, மாம்பாக்கம்– மேடவாக்கம் சாலை, எஸ்.எஸ்.சாலை - ஓரத்தூர் சாலை, அச்சரவாக்கம்-மானாம்பதி சாலை, மேலக்கோட்டையூர் - கீழகோட்டையூர் - பேரூர் சாலை, தண்டலம்–செங்கல்பட்டு இணைப்பு சாலை, இள்ளலூர் இணைப்பு சாலை (வீராணம் பைப்லைன் சாலை), திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியம்– டி.என்.டி. சாலை, ஆனூர் சாலை, சோகண்டி–அழகு சமுத்திரம் சாலை, காங்கேயம் குப்பம், மேட்டுக்குப்பம், திருவாணைக்கோவில் -சியான் கொள்ளை சாலை, செங்கல்பட்டு பி.வி.களத்தூர்–திருக்கழுக்குன்றம் சாலை என 15,000 மீட்டர் சாலை சீரமைக்க வேண்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT