Published : 19 Dec 2016 09:09 AM
Last Updated : 19 Dec 2016 09:09 AM

உயர் நீதிமன்ற வளாகத்தில் புயலில் சாய்ந்த 50 மரங்களை வனத்துறை உதவியுடன் மீட்டெடுக்க முடிவு

வார்தா புயலின்போது உயர் நீதிமன்ற வளாகத்தில் சாய்ந்த 50-க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை வனத்துறையினரின் உதவியுடன் மீட்டெடுக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாகனி, பூப்பந்து, மயில்கொன்றை, நாகலிங்கம், தூங்குமூஞ்சி, நெட்டிலிங்கம், மணி மருது, வேம்பு, நுணா, மஞ்சணத்தி, மணிலா பனை, கூந்தல் பனை, அத்தி, நீல திருத்தி, சரக்கொன்றை, இலவம், மகிழம், இயல் வாகை, மந்தாரை, சீமை அகத்தி, தேக்கு, அரசமரம், ஆலமரம் என சுமார் 240-க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் உள்ளன. அதில் சில மரங்கள் நூற்றாண்டுகால பாரம் பரியமிக்கவை. சில மரங்கள் 10 பேர் சேர்ந்து கைகோர்த்தால்கூட கட்டிப்பிடிக்க முடியாத அளவுக்கு பிரமாண்டமானவை.

இந்த மரங்களுக்கு வரிசை எண் தரப்பட்டு, தமிழ் பெயர், தாவரவியல் பெயர் மற்றும் ஆங்கிலப் பெயர் எழுதி உயர் நீதிமன்ற பாரம்பரிய குழு பாது காத்து வருகிறது. ஆனால் இம்மரங்களின் பராமரிப்பு பொதுப் பணித்துறையினரிடம் உள்ளது.

கடந்த வாரம் வீசிய வார்தா புயலில் இங்குள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த மரங் களை மீண்டும் அதே இடத்தில் வனத்துறையினரின் உதவியுடன் மீட்டெடுக்க பொதுப்பணித்துறை யினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்றத் தின் பழமையையும், பாரம்பரியத் தையும் பறைசாற்றும் பெருமை இந்த மரங்களுக்கும் உண்டு. பெரும்பாலான மரங்களை உயர் நீதிமன்றத்தின் ஒய்யாரக் கட்டிடம்தான் காப்பாற்றி உள்ளது. அதையும் மீறி புயலால் சாய்ந்த மரங்களை அதே இடத்தில் மீண்டும் உயிர்ப்பிக்கும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பம் வனத் துறையினரிடம் உள்ளது. எனவே அவர்களின் உதவியுடன் சாய்ந்த மரங்களை அதே இடத்தில் வேரூன்றச் செய்ய முடிவு செய் துள்ளோம்.

இங்குள்ள மரங்கள்தான் ஆயிரக்கணக்கான பறவைகளின் புகலிடமாகவும் இருந்தது. புயலின் தாக்கத்தால் மரங்களில் இலைகள் விழுந்து மரக்கிளைகள்தான் மிஞ்சியுள்ளன.

இங்கு கூடிகட்டி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடிச் சென்று விட்டதால் உயர் நீதிமன்றத்தின் சூழலியலும் மாறி உள்ளது. சாய்ந்து விழுந்த மரங் களை வெட்டி ஓரத்தில் அடுக்கி வைத்துள்ளோம். நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகே அவற்றை இங்கிருந்து அகற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x