Published : 12 Dec 2022 06:50 PM
Last Updated : 12 Dec 2022 06:50 PM

“அம்பேத்கரை கொச்சைப்படுத்த முயற்சித்தால் விசிகவின் பாதையே வேறாக இருக்கும்” - திருமாவளவன் எச்சரிக்கை

சென்னையில் விசிக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: "அம்பேத்கரை கொச்சைப்படுத்துகிற முயற்சிகளில் ஈடுபட்டால், விடுதலை சிறுத்தைகளின் பாதையும், செயல்பாடுகளும் வேறாக இருக்கும்" என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்..

கும்பகோணத்தில் அம்பேத்கருக்கு காவி உடையுடன், விபூதி மற்றும் குங்குமப் பொட்டுடன் போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், "கொள்கை முரண் உள்ளவர்கள் அம்பேத்கர் சிலைக்கு ஏன் மாலை போட வேண்டும்? யார் நீ? உனக்கும் அம்பேத்கருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விகளை விடுதலை சிறுத்தைகள் எழுப்ப மாட்டோமா? மற்றவர்களை தடுக்கிறோமா?

நீ அம்பேத்கருக்கு காவித்துணி போர்த்துவாய், அம்பேத்கரின் நெற்றியில் பட்டை போடுவாய், அம்பேத்கரின் நெற்றியில் குங்குமமிடுவாய், நீ வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பாய் என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். எப்படி இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியும். இது வரலாற்றுத் திரிபு இல்லையா?

இந்த வரலாற்று திரிபை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும். நாங்கள் என்ன வெறும் பிழைப்புவாத அம்பேத்கர் இயக்கங்களைச் சார்ந்தவர்களா? விடுதலை சிறுத்தைகள். எனவே சேட்டையை கைவிட்டுவிடு. அற்பத்தனமான விளையாட்டை கைவிட்டுவிடு. அம்பேத்கரை கொச்சைப்படுத்துகிற முயற்சிகளில் ஈடுபட்டால், விடுதலை சிறுத்தைகளின் பாதை, செயல்பாடுகள் வேறாக இருக்கும்" என்று அவர் பேசினார்.

முன்னதாக, அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் காவி உடையில், நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் இருப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதையொட்டி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x