Published : 12 Dec 2022 04:22 PM
Last Updated : 12 Dec 2022 04:22 PM
புதுச்சேரி: புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி, ரெஸ்டோ பார்கள் தொடங்க ஒப்புதல் தந்துள்ளதை எதிர்க்கும் அதிமுக, மதுபானக் கொள்கையில் பாஜக நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பி பாஜக மாநிலத் தலைவரிடம் கடிதத்தை தந்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. இத்தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இச்சூழலில் தற்போது ஆளும் அரசு புதிதாக பல குடியிருப்பு மற்றும் பள்ளிப் பகுதிகளில் ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி தந்துள்ளது. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களுடன் போராட்டத்தில் ஆளும் கூட்டணியிலுள்ள அதிமுகவும் பங்கேற்கிறது. கலால் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது.
இச்சூழலில் புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் இன்று பாஜக கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பாஜக மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து ஒரு கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ''என்ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு அமைந்து 2 ஆண்டுகளாக உள்ளது. ஆட்சி அமைந்தது முதல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மதுபானக் கொள்கையால் தள்ளாட்டத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கூடுதலாக 10 மதுபான, சாராய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்துள்ளது.
கவர்ச்சி நடனங்களுடன் கூடிய சுற்றுலா மது பார் (ரெஸ்டோ பார்) அமைக்கவும் நூற்றுக்கணக்கில் அனுமதி வழங்குகிறது. என்ஆர். காங்கிரஸ் அரசு மதுபான உரிமையாளர்களுக்கு, சாராய முதலாளிகளுக்கும் சாதகமாக, அரசின் அனைத்து சட்டவிதிகளையும் மீறி செயல்பட்டு, அனுமதி வழங்கி வருகிறது. இதனால் புதுவையில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடும். புதுவையின் கலாச்சாரம், பண்பாடு முற்றிலுமாக சீர்குலையும்.
இந்த கலாச்சார சீரழிவுக்கு, புதுவை மாநில பாஜக நிலைப்பாடு என்ன? நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே பாஜகவின் தேசிய கொள்கை. ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள புதுவையில் என்.ஆர்.அரசு நாள்தோறும் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள், மது பார்களை திறக்க அனுமதி வழங்கி வருகிறது. ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி என்றாலும், மக்களின் உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் நலனுக்காகவும் தவறுகளை தட்டிக்கேட்பது அரசியல் கட்சிகளின் தலையாய கடமை.
எனவே மதுபான, சாராய கொள்கையில் புதுவை மாநில பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாக, அறிக்கையாக வெளியிட வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி வையாபுரி மணிகண்டன் கூறுகையில், "அரசின் மதுபான கொள்கையை எதிர்க்கிறோம். பாஜகவிடம் கடிதம் தந்துள்ளோம். மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம் என மாநிலத் தலைவர் சாமிநாதன் குறிப்பிட்டார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment