Published : 12 Dec 2022 02:55 PM
Last Updated : 12 Dec 2022 02:55 PM
சென்னை: தமிழகத்தில் யானைகள் முகாம்களில் உள்ள பாகன்களை, 50 லட்சம் ரூபாய் செலவில் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி பெற அனுப்பி வைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழகத்தில் ஆனைமலை, முதுமலை சரணாலயங்களில் உள்ள யானைகளை சிறந்த முறையில் பராமரிக்க, வனத் துறையைச் சேர்ந்த 13 பாகன்கள், வனச்சரகர் ஆகியோருக்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சிக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஆனைமலை மற்றும் முதுமலை சரணாலய நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி நவம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
யானைகளை அடக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்த நிலையில், சிறிய நாடான தாய்லாந்துக்கு பாகன்களை பயிற்சி பெற அனுமதிப்பது தேவையற்றது. யானைகள் முகாம்களில் அவைகளை சிறப்பாக பயிற்றுவித்ததற்காக விருதுபெற்ற பாகன்கள் தமிழகத்தில் உள்ளனர்.
எனவே, தாய்லாந்து பயிற்சிக்காக செலவிடப்பட இருக்கும் தொகையை மூத்த பாகன்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கலாம். தமிழகத்தில் உள்ள வன முகாம்களில் யானைகள் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க உத்தரவிட வேண்டும். எனவே பாகன்களை தாய்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்று டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்க கோரிய வழக்கு நிலுவையில் உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கையும், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் தொடர்பான வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், இரு வழக்குகளின் விசாரணையையும் டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT