Published : 12 Dec 2022 02:55 PM
Last Updated : 12 Dec 2022 02:55 PM
சென்னை: "மாண்டஸ் புயல் பாதிப்பின்போது சைதாப்பேட்டை குடிசைப்பகுதியில் சுவர் இடிந்து ஓடுகள் விழுந்ததில் காயமடைந்த தாய், தந்தை, மூன்றரை வயது குழந்தை மற்றும் 6 மாதக் குழந்தை ஆகிய நால்வருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று ருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மாண்டாஸ் புயலினால் பாதிக்கப்பட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சைதாப்பேட்டையை சார்ந்த கேசவன், லட்சுமி, குழந்தை கீர்த்திகா ஆகியோரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாண்டஸ் புயல் பாதிப்பின்போது சைதாப்பேட்டை நெருப்புமேடு என்கின்ற குடிசைப்பகுதியில் தாய், தந்தை, மூன்றரை வயது குழந்தை மற்றும் 6 மாதக் குழந்தை ஆகிய நான்கு நபர்கள் குடிசையில் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து சுவர் இடிந்து, அதில் இருந்த ஓடுகள் விழுந்து அந்த வீட்டில் இருந்த 4 பேர் பலத்த காயமடைந்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. அவர் சைக்கிள் கடையில் வேலை பார்த்து வருபவர்.
அக்குடும்பத்தின் தாய் ஆறு மாத குழந்தையை அனைத்துக் கொண்டுப் படுத்திருக்கிறார். அதனால் சிறு குழந்தைக்கு பெரிய அளவில் எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதில் மூன்றரை வயது குழந்தைக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்குழந்தை வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த சகோதரியும் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தோடு சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு அனைத்து சிறப்பு மருத்துவர்களுடன் நேரம் பாராமல் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
அக்குடும்பத் தலைவரை பொறுத்தவரை நல்ல சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கும் தலையில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. இவர்கள் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். இதில் 6 மாதக் குழந்தைக்கு மட்டும் சிறு அளவிலான சிராய்ப்பு மட்டுமே. பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை. அக்குழந்தைக்கு எலும்பு முறிவு போன்ற பாதிப்புகள் இருக்கின்றதா என்பதை கண்டறிந்து வருகிறோம். இதில் மூன்றரை வயது குழந்தை மற்றும் தாய்க்கு மட்டும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.
மாண்டாஸ் புயல் கரையை கடந்தவுடன் சரியாக 6 மணிக்கு அந்த வீட்டிற்கு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டோம். அந்த வீடு நொறுங்கிய நிலையில் இருந்தது. அந்த இடர்பாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இந்நிகழ்வு தமிழக முதல்வரின் கவனத்திற்கு விபத்து நடந்த அன்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் நான் சார்ந்திருக்கும் சட்டமன்ற தொகுதி என்பதால் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT