Published : 12 Dec 2022 11:35 AM
Last Updated : 12 Dec 2022 11:35 AM

புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி அமையும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: "புதுச்சேரி மாநிலத்தில் திமுக ஆட்சி அமையும். திராவிட மாடல் ஆட்சி புதுச்சேரிக்கு வருவது தற்போதைய தேவை" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமார் இல்ல திருமண விழா இன்று (டிச.12) புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தமிழகம், புதுச்சேரி என நான் பிரித்து பார்ப்பதில்லை. தமிழகம் புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகள் என்றுதான் சொல்வது வழக்கம். திராவிட இலக்கியத்தின் தலைநகர் புதுச்சேரிதான். கழகத்தில் இருப்போரிடம் போட்டி இருந்தால்தான் கட்சி வளரும். அதே நேரத்தில் பொறாமை கூடாது. தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டு உதயசூரியன் மலந்து திராவிட மாடல் என்று பெருமையோடு சொல்கிறோம். திராவிட மாடல் ஆட்சிபுதுச்சேரிக்கு வருவது தேவைதான். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அந்த ஆசை உள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட அந்த வாய்ப்பு கிட்டியது. ஆனால் போய்விட்டது.

தற்போது புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடக்கிறது. ஆனால், மக்களுக்காகதான் நடக்கிறதா. புதுச்சேரி முதல்வர் உயர்வானவர்தான். நல்லவர்தான். ஆனால் அடிப்பணிந்து கிடக்கிறார். வல்லவராகவும் இல்லை. ஆளுநர் ஆட்டிபடைக்கும் வகையில் புதுச்சேரியில் ஆட்சி நடப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா- அடங்கி ஒடுங்கி போய் ஆட்சி நடக்கிறது. இது புதுச்சேரிக்கு இழுக்கு. ஏதாவது நன்மை நடந்துள்ளதா? இச்சூழலில் புதுச்சேரியில் திமுக ஆட்சி வர விரும்புகிறார்கள். ஏற்கெனவே திமுக ஆட்சியும், திமுககூட்டணி ஆட்சியும் நடந்துள்ளது. நிச்சயமாக திமுக ஆட்சி மீண்டும் புதுச்சேரியில் உதயமாகும். அதேநேரத்தில் உறுதியாக மதவாத ஆட்சி புதுச்சேரியில் உருவாகி விடக்கூடாது. வரும் நாடாளுமன்றத் தேர்தல், அதைத்தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சி அமைக்கும் இலக்கோடு பணியாற்ற வேண்டும். தேர்தல் நேரத்தில் யார் கூட்டணி, எவ்வகையில் அமையப்போகிறது என்பது அப்போது முடிவு எடுக்கப்படும். வெற்றிக்கு அச்சாரமாய் நாம் கடமையை துவக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

திராவிட மாடலை விமர்சித்த தமிழிசை: முன்னதாக நேற்று தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி ஒன்றில் திராவிட மாடல் என்ற பெயரை விமர்சித்திருந்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் மாண்டஸ் புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் மற்ற மாநில ஆட்சி குறித்தும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனாலும் உயிரிழப்பு இல்லாமல் காத்திருப்பது அவசியம். அதை எடுத்துரைக்க திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும். மாடல் என்பது தமிழா? அவர்கள் என்ன சொன்னாலும் அது தமிழ் வார்த்தை ஆகிவிடுமா? திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என்று கூறியுள்ளார். முன்னதாக பேசிய புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில அமைப்பாளருமான சிவா, "புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சிக்கொண்டு வரவேண்டும். அதற்கான நடவடிக்கையை தலைவர் எடுக்கவேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x