Published : 12 Dec 2022 06:51 AM
Last Updated : 12 Dec 2022 06:51 AM
சென்னை: குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று குஜராத் புறப்பட்டு சென்றார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜககைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வாழ்த்து கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக இன்று (டிச. 12)பதவியேற்கிறார். காந்தி நகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜகசார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை விமானம் மூலம் குஜராத் புறப்பட்டுச் சென்றார்.
இந்த விழாவில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்கும்பட்சத்தில், அவர் பிரதமரை சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கும் அழைப்பு வந்திருப்பதாகவும், ஆனால், அவர் விழாவில் பங்கேற்கச் செல்லவில்லை எனவும்அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, குஜராத் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் பூபேந்திர படேலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றமைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். திங்கள்கிழமை நடைபெறும் தங்களது பதவியேற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அனுப்பிய அழைப்பிதழ் கிடைத்தது.
அந்த விழாவில் நான்பங்கேற்க ஆவலுடன் இருந்தாலும், முன்கூட்டியே சில முக்கியபணிகள் மேற்கொள்ள உறுதியளித்திருப்பதால், அந்த விழாவில் பங்கேற்க முடியாத நிலையில் இருக்கிறேன். முதல்வராக பதவியேற்கும் தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் முதல்வராக பணியாற்றும் காலத்தில் குஜராத் மாநிலத்தை தொடர்ந்துமுன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT