Published : 12 Dec 2022 07:56 AM
Last Updated : 12 Dec 2022 07:56 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்டவற்றுக்காக 23 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. .

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த நவ. 9-ம் தேதி தொடங்கியது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது, 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3,03,95,103 ஆண்கள், 3,14,23,321 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்: 7,758 பேர் அடங்குவர்.

தொடர்ந்து நவ. 9-ம் தேதி முதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல்,முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டன. நேரிலும், இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கடந்த நவ, 12,13 மற்றும் 26, 27 ஆகிய நான்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 7,57,341 விண்ணப்பங்கள், பெயர்நீக்கத்துக்கு 6,05,062 விண்ணப்பங்கள் உட்பட 17,02,689 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த டிச. 8-ம் தேதியுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி முடிவடைந்தது.

அந்தவகையில், கடந்த நவ. 9முதல் டிச. 8 வரை 23,03,310 விண்ணப்பங்கள், ஆன்லைன் வாயிலாகவும், நேரிலும், சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பங்களில் அதிகபட்சமாக சேலத்தில் 1.53 லட்சமும், திருவள்ளூரில் 1.46 லட்சமும், சென்னையில் 1.16 லட்சமும் பெறப்பட்டுள்ளது. இதில் பெயர் சேர்க்க மட்டும் 10,34,018 விண்ணப்பங்கள் வந்துள்ளன. திருத்தம் செய்ய 4,78,726விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பெயர் சேர்க்க திருவள்ளூரில் 62,658, சேலத்தில் 55,593, சென்னையில் 54,227 மனுக்களும், நீக்கம் செய்ய, சேலத்தில் 70,067, திருச்சிராப்பள்ளியில் 41,816, கன்னியாகுமரி 38,561 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வு மூலம் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளர்கள் தொடர்ந்து , பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தத்துக்காக www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “VOTER HELP LINE" கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆனால், தற்போது பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அந்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x