Published : 17 Dec 2016 08:11 PM
Last Updated : 17 Dec 2016 08:11 PM
தனுஷ்கோடியில் வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் தொன்மையான கட்டிடங்களைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைத்திட ராமநாதபுரம் ஆட்சியர் ச. நடராஜன் உத்திரவிட்டுள்ளார்.
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக சேதமடைந்து இன்று வரையுள்ள தொன்மை வாய்ந்த கட்டிடங்களின் பழமை மாறாமல் பராமரித்து தனுஷ்கோடியை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பது தனுஷ்கோடி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.
தனுஷ்கோடிக்கு வரும் செல்ஃபி பிரியர்கள் இங்குள்ள ஆள் அரவமற்ற பகுதிகளில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டிடங்களின் உச்சிக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். இதனால் பலவீனமாக உள்ள பழமையான கட்டிடங்கள் இடிவதற்கும், சுற்றுலாப் பயணிகள் கீழே விழுந்து உயிரிழக்கும் அபாயங்கள் உள்ளன. பழைய கட்டிடங்களைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும், என்று நேற்று தி இந்து தமிழில் ''சேதமடைந்த கட்டிடத்தின் உச்சியில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்: தனுஷ்கோடியில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள்'' என்கிற தலைப்பில் செய்தி வெளியானது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.நடராஜன் தனுஷ்கோடியில் சனிக்கிழமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தனுஷ்கோடிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயனிகளின் நலனுக்காக தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையிலான 2 கி.மீ. தொலைவிற்கு ரூ.11 கோடி மதிப்பில் சாலையோரத்தில் கடல் அரிப்பினை தடுத்திடும் வகையில் அலை தடுப்பு கல்சுவர் அமைப்பதற்கான பணிகளை உடனடியாக துவங்கிடவும், தனுஷ்கோடியில் வரலாற்றுச் சின்னமாக விளங்கி வரும் பழம்பெரும் தேவாலயம் உள்ளிட்ட தொன்மை வாய்ந்த கட்டிடங்களைச் சுற்றி பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைத்திடவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் ச. நடராஜன் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்கண்ணதாசன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT