Published : 11 Dec 2022 03:17 PM
Last Updated : 11 Dec 2022 03:17 PM
மதுரை: தமிழகத்திலுள்ள 48 முதுநிலை ஆலயங்களில் செல்போன் தடை அமல்படுத்தப்படும். முதலில் திருச்செந்தூரில் செயல்பாட்டுக்கு வரும்.என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அழகமலையிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது. அதனை தொடர்த்து சோலைமலை முருகன் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பில் உபயதாரர்கள் மூலம் வெள்ளிகதவுகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ பழமையான கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் ஒதுக்கி திமுக அரசு திருப்பணிகளை செய்து வருகின்றது. கோயில்களில் நிலுவையில் இருந்த ரூ.260 கோடி வாடகை பாக்கியை வசூலித்துள்ளோம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் எவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்கப்படுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக விரைந்து முடிக்கப்படும்.
ஆலயங்களில் செல்போன் பயன்பாடு தடை குறித்து நீதிமன்ற உத்தரவை பொறுத்தவரையில், ஏற்கனவே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. இதேபோல தமிழகத்திலுள்ள 48 முதுநிலை ஆலயங்களில் செயல்படுத்தப்பட்டு, முதலில் திருச்செந்தூரில் அமல்படுத்தப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் அய்யர்மலை, சோழிங்கர் உள்ளிட்ட இடங்களில் மலைக்கோயில்களில் ரோப்கார் சேவையை ஏனோதானோ என செய்தனர். திமுக அரசு பொறுப்பேற்றபின் முறையாக நிதி ஒதுக்கப்பட்டு மலைக்கோயில்களில் ரோப்கார் பணிகள் வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.
போலிச் சான்றிதழ் மூலம் அறநிலையத்துறையில் பணியில் சேர்ந்துள்ளதாக புகார் கூறுபவர்கள்,வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என கூறாமல் தகுந்த ஆதாரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்களே விசாரித்து உண்மை என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
மீட்கப்பட்ட சிலைகள் தங்களுக்கு சொந்தமானது என கோயில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் மட்டுமே அவர்களிடமே ஒப்படைக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்று வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT