Published : 11 Dec 2022 05:29 AM
Last Updated : 11 Dec 2022 05:29 AM

மெரினா கடற்கரையில் மரங்கள் விழுந்ததால் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தடை

‘மேன்டூஸ்’ புயல் காரணமாக கடல் அலைகளின் சீற்றத்தால், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் குவிந்த மணலை இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.படம்: பு.க.பிரவீன்

சென்னை: ‘மேன்டூஸ்’ புயல் தாக்கியதில் பட்டினப்பாக்கம் அருகே மீனவர்களின் வீடுகள் சேதம் அடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததால் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவு வீசிய ‘மேன்டூஸ்’ புயல் காரணமாக,சென்னை கடற்கரையை ஒட்டியபகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வீடுகள் சேதம் அடைந்தன. வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களும் சேதமாகின.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறும்போது, ‘‘புயல் வீசும்போது எல்லாம் எங்கள் பகுதியில் வீடுகள் சேதம் அடைகின்றன. தற்போது வீசிய புயல் காரணமாக எங்களுடைய வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால், வீட்டில் வைத்திருந்த துணி, உணவுப் பொருட்கள் ஆகியவை மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம்வழங்குவதோடு, எங்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

மெரினா கடற்பகுதியில் புயலின்போது எழுந்த ராட்சத அலைகளால்,மணல் பரப்பில் இருந்த மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை சர்வீஸ்சாலைக்கு அடித்துச் செல்லப்பட்டன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர். கடல்நீர் புகுந்ததால் மெரினா கடற்கரையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது.

பெசன்ட் நகர், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சர்வீஸ் சாலைகள் முழுவதும் சூறாவளி காற்று காரணமாக மணல் அடித்துச்செல்லப்பட்டு மணலால் மூடப்பட்டது. அவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

மெரினா கடற்கரையில் மறைந்தமுன்னாள் முதல்வர்கள் அண்ணா,எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடங்கள் உள்ளன.அங்கு இருந்த 2 மரங்கள் புயல்காற்றில் சிக்கி முறிந்து விழுந்தன.உடனடியாக மரங்களை வெட்டிஅகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், மெரினா கடற்கரை மற்றும் நினைவிடங்களில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், மெரினா,பெசன்ட் நகர் ஆகிய கடற்பகுதிகளிலும் பாதுகாப்புக் கருதி பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

உத்தண்டி அருகே நயினார் குப்பம் பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றில் சிக்கி 60-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன. 5 படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. மீன்பிடி வலைகளும் சேதம் அடைந்தன.

முதல்வர் ஸ்டாலின் உதவி: சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட ஈஞ்சம்பாக்கம், கொட்டிவாக்கம் பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் ஆகியோரும் நேரில் சென்று மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

செல்போன் டவர் சரிந்தது: எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் நேற்று முன்தினம் பெய்த கனமழைமற்றும் சூறைக்காற்று காரணமாக வலுவிழந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை அந்த செல்போன் டவர் சரிந்து கீழேவிழுந்து விபத்து ஏற்பட்டது. சம்பவஇடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், சரிந்து விழுந்த செல்போன் டவரை அப்புறப்படுத்தினர்.

இதேபோல், எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் மீது பழமையான மரம்ஒன்று விழுந்தது. இதில் பெட்ரோல்நிலையம் பலத்த சேதமடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x