Published : 11 Dec 2022 11:07 AM
Last Updated : 11 Dec 2022 11:07 AM
மேன்டூஸ் புயல் கரையைக் கடந்தநிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மரங்கள் முறிந்தன; பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடல் அரிப்பால் சாலைகள், வீடுகள் சேதமடைந்தன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இந்த பாதிப்புகளை சீராக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்புதூரில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
மேன்டூஸ் புயலால் மாமல்லபுரம் அடுத்த தேவனேரியில் கடல் அலைகள் பலத்த சீற்றத்துடன் காணப்பட்டன. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சிமென்ட் சாலைகள் இடிந்து நொறுங்கின. மீன்பிடி வலைகளும் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதியில் புயலால் எப்படிபட்ட சேதங்கள் ஏற்பட்டன என்பது குறித்து ஆய்வு செய்து மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு அறிக்கை வழங்குவதற்காக சென்னையில் உள்ள மத்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று வந்து ஆய்வு செய்தனர்.
மேலும் புயலால் கடலோர கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்துவிழுந்ததால் நேற்று மாலை வரைமின் விநியோகம் தடைபட்டது.
பின்னர், பணிகள் நிறைவடைந்து படிப்படியாக மின்சாரம் விநியோகம் சீரானது. அதேநேரம் கேளம்பாக்கம், கோவளம், கண்டிகை, மாம்பாக்கம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனை சீராக்கும் பணிகள் நடந்து வந்தன.
கடந்த 24 மணி நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 133.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தில் 10 வீடுகள் சேதமடைந்தன. 6 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 68 மரங்கள், 5 மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. 3 படகுகள் சேதமடைந்துள்ளன.
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக 130.37 மி.மீமழை பதிவானது. பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால்பொதுமக்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர். பெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் பகுதியில் மரம் ஒன்று மின்கம்பி மீது விழுந்தது. அதில் மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.
அப்போது பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவத்தில் பணி செய்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபன் சர்மா (23),நிரஞ்சன் சர்மா (21) ஆகிய இருவரும் தெரியாமல் மிதித்ததில் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் மழை பாதிப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இல.சுப்பிரமணியன், ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஆட்சியர் கூறியதாவது: இந்த புயல் மழைகாரணமாக 110 வீடுகள் சேதமடைந்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன.
வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துள்ளது. அவற்றை வெளியேற்றும் பணி நடக்கிறது. விவசாய பாதிப்புகுறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மழையால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு 64முகாம்கள் உருவாக்கப்பட்டுஉள்ளன. அதில் 676 குடும்பங்களைச் சேர்ந்த 2,236 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு, ஆவடி, திருத்தணி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 107 மரங்களும், 98 மின்கம்பங்களும், 9 மின்மாற்றிகளும் சாய்ந்தன. அவற்றில் பெரும்பாலான மரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றினர். மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை பழுதுபார்க்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் 24 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஓர் ஆடு, 6 மாடுகள் உயிரிழந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT