Published : 10 Dec 2022 10:12 PM
Last Updated : 10 Dec 2022 10:12 PM

விவசாயி செம்புலிங்கத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்; அரியலூரில் நாளை ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு காரணமான காவல்துறையினரின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை அரியலூர் மாவட்டத்தில், விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்டும், திமுக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயியும், தமிழக பாஜகவின் தொண்டருமான அண்ணன் செம்புலிங்கம் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த அண்ணன் செம்புலிங்கத்தின் மகன் மணிகண்டனை இன்று திருச்சியில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு, அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோருடன் சந்தித்து ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டோம்.

உயிரிழந்த செம்புலிங்கத்துக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம். மணிகண்டனிடம் காசாங்கோட்டையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு வந்து அவரது தாயாரை சந்திப்பேன் என்று உறுதி அளித்துள்ளேன். இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரின் மேல் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை (டிச.11) அரியலூர் மாவட்டத்தில், உயிரிழந்த செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்டு, திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த நவம்பர் 25 ஆம் தேதி விவசாயி செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் என்பவர் மீது கொடுக்கப்பட்ட சாதாரண புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல் என்பவர் தலைமையில் 8 காவலர்கள் செம்புலிங்கம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நிலையில், வீட்டில் அருண்குமார் இல்லை என்பதால் ஆத்திரமடைந்து, வீட்டிலிருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோரைத் தாக்கியதாகவும், இத்தாக்குதலில் கடுமையாகக் காயமடைந்த மூவரும், அரியலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு விவசாயி செம்புலிங்கம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x