Published : 10 Dec 2022 08:39 PM
Last Updated : 10 Dec 2022 08:39 PM
சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையைச் சேர்ந்த 3 பேர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 பேர் ஆகிய 5 பேர் உயிரிழந்ததாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த 3 பேர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 2 பேர் இறந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 98 கால்நடைகள் பலியாகி உள்ளன. 25 குடிசைகள் முழுமையாகவும், 138 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன, இவைத்தவிர 18 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மீனவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி அவர்களை பத்திரப்படுத்தியதன் விளைவாக மீனவர்கள் தரப்பில் உயிர்ச் சேதங்கள் எதுவும் இல்லை. இரண்டு பைஃபர் படகுகள் முழுமையாகவும், 25 படகுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 40 இயந்திர படகுகள் முழுமையாகவும், 2 படகுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும் 140 வலைகள் சேதமடைந்துள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழையின் காரணமாக மொத்தம் 694 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவை உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 216 நிவாரண மையங்களில் 10,843 பேர் தற்போது தங்கியுள்ளனர். இன்றும், நாளையும் அவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பொதுவாக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக குறுகிய காலத்தில் போக்குவரத்தை சீரமைத்துள்ளோம். மரங்களை அப்புறப்படுத்தியிருக்கிறோம்.
சென்னையில் தண்ணீர் தேங்காத வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளோம். முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் காரணமாக இதனை செய்து முடித்திருக்கிறோம். தற்போது புயல் வலுவிழந்துள்ளதால் இனி மிகப்பெரிய சேதங்கள் இருக்காது என்று எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT