Published : 01 Dec 2016 10:00 AM
Last Updated : 01 Dec 2016 10:00 AM
வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக பல்வேறு வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பரங்கி மலை கோயம்பேடு, விமான நிலை யம் - ஆலந்தூர் சின்னமலை இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அடுத்த 3 மாதங்களில் இந்தத் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, தற்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த வசதியை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பயண கட்டணத்தை வசூலிக்க புதிய திட்டத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் கொண்டுவர உள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னையில் தற்போது சுமார் 19 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்கின்றனர். மற்ற வழித்தடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அப்போது, பயணிகளின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களில் கவுன்ட்டர்கள் மூலமும், ஸ்மார்ட் கார்டு மூலமும் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.
பயணிகள் வரிசையில் காத் திருப்பதைத் தவிர்க்கவும், சில் லறை பிரச்சினையை தீர்க்கும் வகையிலும் பல்வேறு வங்கி களின் டெபிட், கிரெடிட் கார்டு கள் மூலம் டிக்கெட்டுக்கான கட்டணம் வசூலிக்க உள்ளோம். ஹோட்டல்கள், பெரிய கடை களில் வங்கி அட்டைகளை ஸ்வைப் செய்து கட்டணத்தை வசூலிப்பதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஸ்வைப் செய்து கட்டணம் வசூலிக்கப்படும். இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஒட்டுமொத்த மெட்ரோ ரயில் சேவையும் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்த திட்டமும் நடைமுறைக்கு வரும். இதனால், மக்களின் நேரத்தை சேமிப்பதுடன் விரைவாக பயணம் செய்யவும் முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT