Published : 10 Dec 2022 06:25 AM
Last Updated : 10 Dec 2022 06:25 AM
திருநெல்வேலி: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் வெள்ளரை குண்டுபெரும்பேடு பகுதியில் உள்ள தொல்லுயிர்ப் படிமங்கள் நிறைந்த ஏரியில் சாலை விரிவாக்கத்துக்காக மண் தோண்டப்பட்டதை திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஈ.சங்கரநாரா யணன் அளித்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தடுத்து நிறுத்தி ஆணையிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் இருந்து மலைப்பட்டு, இரும்பேடு, பிள்ளைப்பாக்கம் வழியாக திருப்பெரும்புதூர் செல்லும் சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக தொல்லுயிர்ப் படி மங்கள் நிறைந்த ஏரியில் இருந்து மண் தோண்டப்பட்டு வருகிறது. வழக்கமான தொல்லியல் கள ஆய்வுக்கு அவ்வழியாக சென்ற தொல்லியல் ஆய்வாளரும் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியருமான ஈ.சங்கர நாராயணன் அங்கு சாலையில் படிமக்கற்கள் நிறைந்து காணப்பட்டதை பார்த்தார்.
அபராதம் விதிப்பு: இது தொடர்பாக உடனடியாக தமிழக தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு புகார் அளித்தார். அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தியின் உத்தரவின்பேரில் உரிய துறை அலுவலர்கள் உடனடியாக அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்பகுதியில் தொல்லுயிர் படிமங்கள் மண்ணுடன் சேர்த்து அள்ளப்பட்டது உறுதியானதை அடுத்து, அங்கு மண் அள்ளுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ஆட்சியர் ரத்து செய்தார். அத்துடன் ஒப்பந்தப் புள்ளி எடுத்திருந்த தனியார் நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டுஉள்ளது.
இது குறித்து சங்கரநாராயணன் கூறியதாவது: பல கோடி ஆண்டுகளுக்குமுன் பூமியிலிருந்த தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் உடல் சுண்ணாம்பு மண் போன்ற தாதுப்பொருளால் மூடப்பட்டு கல்லாக உருமாறிய நிலையில் கிடைப்பதை தொல்லுயிர்ப் படிமங்கள் (fossils) என அழைக்கிறோம். இவை பூமியில் அரிதினும் அரிதாக சில இடங்களில் மட்டும் கிடைக்கின்றன. சுண்ணாம்பு களிமண்ணால் ஆன பல சிறிய அடுக்குகளைப்போல இருக்கும் பாறை துண்டுகளை பிரித்தால் உள்ளே பழமையான தொல்லுயிர் படிமங்கள் இருப்பதை காணமுடியும்.
தமிழ்நாட்டில் அரியலூர், விருத்தாசலம், சிவகங்கை, திருப்பெரும் புதூர் பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. திருப்பெரும்புதூர் வட்டம், வெள்ளரை, குண்டு பெரும்பேடு பகுதி தொல்லுயிர்ப் படிமங்கள் நிறைந்த பகுதியாகும். இவ்விரு ஊர்களுக்கும் நடுவில் உள்ள ஏரியிலும் தொல்லுயிர்ப் படிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மணலுடன் சேர்த்து தொல்லுயிர் படிமங்களை அள்ளி எடுத்து சென்றது தெரியவந்ததால் புகார் செய்திருந்தேன். அதன்பேரில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT