Published : 09 Dec 2022 04:26 PM
Last Updated : 09 Dec 2022 04:26 PM
சென்னை: அந்தந்தப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும், மறுப்பதும் காவல் துறையின் தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது எனக் கூறி, கோவை காவல் துறையினருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ்.கல்யாணி என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், "தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். அதற்காக வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கூறி வால்பாறை காவல் நிலையத்தில் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல் துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தவில்லை. எனவே கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி வி.பத்ரி நாராயணன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், 105 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு உரிய பாதுகாப்பு அளிப்பது சிரமம். பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் ஆகியவற்றால், தற்போது கோவையில் ஊர்வலம் நடத்த தகுந்த சூழல் இல்லை. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும்போது, வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில்தான் விண்ணப்பம் நிராகரிப்பட்டது. எனவே, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" என்று தெரிவித்தார்.
காவல் துறையின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்தந்தப் பகுதிகளில் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும் அனுமதி மறுப்பதும் காவல் துறையினுடைய தனிப்பட்ட அதிகாரம் எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT