Published : 09 Dec 2022 03:35 PM
Last Updated : 09 Dec 2022 03:35 PM

மாண்டஸ் புயல் | பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன? - பேரிடர் மேலாண்மைத் துறை வழிகாட்டுதல்

சென்னை: புயல் நேரங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன என்பது குறித்து தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக்கிழமை காலை வலுவிழந்து புயலாக, காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 260 கி.மீட்டர் தொலைவிலும்,
காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கில் சுமார் 180 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை இரவு - சனிக்கிழமை அதிகாலைக்குட்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்லபுரத்தை ஒட்டி கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிவுரைகள்:

பொதுமக்கள் செய்ய வேண்டியவை:

  • ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  • பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தும்போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும்.
  • இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (முகநூல், ட்விட்டர்), TNSMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரபூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்றுவதோடு, வதந்திகளை நம்பக்கூடாது.
  • அதிகாரபூர்வ தகவல்களுக்காக வானொலி மற்றும் தொலைக்காட்சியை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
  • கேஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அணைத்து வைக்கவேண்டும.
  • வீட்டை விட்டு வெளியேறும்போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இருக மூடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • வீட்டின் மின்இணைப்பு மற்றும் சுவிட்சுகள் அணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • முதியோர், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை தவறாமல் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • மெழுகுவர்த்தி, கை மின்விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவக் கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் செய்யக் கூடாதவை

  • 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்.
  • பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும்போது திறந்த வெளியிலும் தன்படம் (செல்ஃபி) எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • புயல் மற்றும் கனமழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x