Published : 09 Dec 2022 12:58 PM
Last Updated : 09 Dec 2022 12:58 PM

தீவிர புயலாக நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது: சென்னைக்கு 260 கி.மீ தொலைவில் மையம்

தொடர்ந்து நகர்ந்து வரும் புயல்

சென்னை: மாண்டஸ் அதிதீவிர புயல், புயலாக வலுவிழந்து சென்னைக்கு 260 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், "மாண்டஸ் தீவிர புயல் தற்போது வலு குறைந்து சென்னைக்கு தெற்கு, தென் கிழக்கே, 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து. இன்று காலை இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்" என்றார்.

இதன் காரணமாக காரணமாக காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று (நவ.9) அதீத கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதன்படி நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை சென்னையில் தண்டையார் பேட்டை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், நந்தனம் ஆகிய இடங்களில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது. பெரம்பூர், டிஜிபி அலுவலகம், புழல் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ, எம்ஜிஆர் நகர், அயனாவரம், தரமணி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள் அவசியமான காரணங்களுக்காக மட்டுமேப் பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்," பொது மக்கள் கவனத்திற்கு மேன்டூஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமேப் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று கூறப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்க உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகள் இன்று (நவ.9) இரவு வழக்கம் போல் இயங்கும் என்று அனைத்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதைத்தவிர்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மிகக் கனமழை எச்சரிக்கை காரணமாக புழல் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணியளவில் முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 140 கன அடியாக உள்ளது. 21 அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 17 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்தும் இன்று மதியம் 12 மணியளவில் தலா 100 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x