Published : 09 Dec 2022 06:18 AM
Last Updated : 09 Dec 2022 06:18 AM
சென்னை: மாநில தகவல் ஆணைய தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணையர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய ஆணையர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2005-ல் மாநில தகவல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. மாநில தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால், தகவல் ஆணையர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.தர் ஆகியோர் செயல்பட்டனர்.
தகவல் ஆணையராக பணியாற்றுவோருக்கு 3 ஆண்டுகள் பணிக்காலமாகும். அந்த வகையில், தலைமை தகவல் ஆணையர் ஆர்.ராஜகோபாலின் பதவிக்காலம் நவம்பர் 20-ம் தேதி முடிவடைந்ததால், அவர் பணியில் இருந்து விலகினார்.
அதேபோல, தகவல் ஆணையர்கள் எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோரது பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்கள் பதவிகளுக்குத் தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கான கால அவகாசம் கடந்த 3-ம் தேதியுடன் முடிவடைந்து, விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் அடங்கிய பட்டியலை தேர்வுக் குழு அரசிடம் சமர்ப்பிக்கும். அந்தப் பட்டியலில் இருந்து, தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர்களை முதல்வர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்வு செய்யும்.
உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT