Published : 16 Dec 2016 11:36 AM
Last Updated : 16 Dec 2016 11:36 AM

சென்னை - பொள்ளாச்சி ரயிலில் பழநி வரை மட்டுமே டிக்கெட் விநியோகம்: பொள்ளாச்சி, உடுமலை பயணிகள் அவதி

சென்னையிலிருந்து பொள்ளாச்சிவரை செல்லும் ரயிலில் பழநி வரை மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்து பொள்ளாச்சி செல்பவர்கள் பழநியில் இறங்கி டிக்கெட் எடுத்த பின்னரே மீண்டும் அதே ரயிலில் பயணம் செய்யவேண்டிய நிலை உள்ளதால் அவதிக்குள்ளாகின்றனர்.

திண்டுக்கல்- பழநி இடையே அகலரயில்பாதை பணி முடிந்தவுடன் பழநியிலிருந்து மதுரை, திருச்செந்தூர், சென்னை ஆகிய ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் பழநியிலிருந்து பொள்ளாச்சி வரை அகலரயில் பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து பழநியிலிருந்து புறப்பட்ட சென்னை ரயில்பொள்ளாச்சியிலிருந்து புறப்பட தொடங்கியது. கடந்த ஜனவரி முதல் பொள்ளாச்சி- சென்னை, சென்னை- பொள்ளாச்சி என எதிரெதிரே இரு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன. ஆனால் சென்னை-பொள்ளாச்சி ரயிலில் டிக்கெட்கள் பழநி வரை மட்டுமே வழங்கப்படுகின்றன.

இதனால் சென்னையிலிருந்து பழநியை அடுத்த உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்கு செல்பவர்கள் இந்த ரயிலில் பயணிக்க வேண்டுமானால், பழநி ரயில் நிலையத்தில் இறங்கி பொள்ளாச்சிக்கு டிக்கெட் எடுத்துவந்து மீண்டும் ரயிலில் ஏறவேண்டும். அதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டால் பல மணி நேரத்துக்குப் பின் அடுத்த ரயிலில்தான் செல்லவேண்டும்.

மேலும் தங்கள் உடமைகளுடன் பயணிப்பவர்கள் பெட்டியை தூக்கிக்கொண்டு ரயில் நிலையத்தின் முன்பகுதிக்கு சென்று டிக்கெட் எடுத்து திரும்புவது என்பது சாத்தியமில்லாதநிலை.

சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்கு பயணம் செய்பவர்களின் உறவினர்கள் பழநியில் இருந்தால் அவர்களை அழைத்து பழநியிலிருந்து பொள்ளாச்சிக்கு டிக்கெட் எடுத்துவரச் சொல்லி, பொள்ளாச்சி ரயிலில் தொடர்ந்து பயணித்த அனுபவமும் சில பயணிகளுக்கு உண்டு.

இதேநிலையில் பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு பயணிப்போர், பொள்ளாச்சியிலிருந்து பழநி வரை சாதாரண டிக்கெட் எடுத்து பயணிக்கின்றனர். அதே ரயிலில் தாங்கள் முன்பதிவு செய்திருப்பதால் தொடர்ந்து சென்னை வரை பிரச்சினையின்றி பயணிக்க முடிகிறது.

இதுகுறித்து ரயில்வே அலுவலர் ஒருவர் கூறியதாவது:

கம்ப்யூட்டரில் சிறிய மாற்றம் செய்தாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம். சென்னையிலிருந்து பழநி வரை எக்ஸ்பிரஸ் ரயிலாகவும், அங்கிருந்து பொள்ளாச்சிக்கு தனி ரயிலாகவும் இயக்கப்படுவதாக கணக்கு காட்டியுள்ளனர். இதனால்தான் சென்னையிலிருந்து பொள்ளாச்சி வரை ஒரே டிக்கெட் பெறுவதில் குளறுபடி உள்ளது. இதை ரயில்வே நிர்வாகத்தின் சம்பந்தப்பட்ட துறையினர் ஓராண்டாக நிவர்த்தி செய்யாமல் உள்ளது வேதனைக்குரியது என்றார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே தலைமை அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘ரயில் பயணிகளிடமிருந்து இது தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும், இது குறித்து ஆய்வு நடத்த சம்பந்தப்பட்ட ரயில்வே அலுவலர்களுக்கு உத்தரவிடப்படும். புகார் உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x