Last Updated : 16 Dec, 2016 12:20 PM

 

Published : 16 Dec 2016 12:20 PM
Last Updated : 16 Dec 2016 12:20 PM

செங்கல் சூளைகளால் கபளீகரமாகும் ஆற்றங்கரைகள்: எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் வலங்கைமான், பாபநாசம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்லுக்கு தமிழகத்தில் தனி மவுசு உண்டு. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் புற்றீசல்கள் போல காணப்படுகின்றன.

இயற்கை வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடும் இந்த செங்கல் சூளைகளை நடத்துபவர்கள், டெல்டாவில் எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயத்தைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், அரசு அனுமதியின்றி தங்கள் விருப்பத்துக்கேற்ப செயல்படுவது வேதனையை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பூமிக்கடியில் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டுவதென்றால் கூட கனிமவளத் துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதனால்தான் தமிழகத்தின் பாரம்பரியத் தொழிலான மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலுக்குத் தேவையான மண் கிடைக்காததால் இந்த தொழிலைவிட்டு மண்பாண்டத் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

ஆனால், மண்ணையே காசாக்கி, இயற்கை வளத்தைச் சுரண்டும் செங்கல் சூளைகளைப் பற்றி அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் செங்கல் சூளைகள் பெரும்பாலும் ஆறு, வாய்க்கால் கரையோரங்களில்தான் உள்ளன. ஆற்றின் கரைகளில் தேவையான மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என்பதுடன், செங்கல் உற்பத்திக்குத் தேவையான தண்ணீரும் தடையில்லாமல் கிடைப்பதுதான் இதற்குக் காரணம்.

அதேபோல, ஆற்றின் கரைகளில் குடிசைகள் அமைத்து, அங்கு பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் யாருடைய அனுமதியுமின்றி இந்தச் சூளைகளை நடத்த முடிகிறது. மேலும், சூளைக்குத் தேவையான மரங்கள் இப்பகுதிகளில் தாராளமாக கிடைப்பது, செங்கல் சூளை நடத்துபவர்களுக்கு வசதியாக உள்ளது.

குறிப்பாக கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் வாழ்க்கை, குடிதாங்கி, மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர் ஆகிய பகுதிகளிலும், திருமலைராஜன் ஆற்றின் கரைகளில் பட்டீஸ்வரம், தென்னூர் பகுதிகளிலும், வெட்டாற்றின் கரைகளில் ஒன்பத்துவேலி, மெலட்டூர், நெடார், திருக்கருகாவூர், வெண்ணாற்றின் கரைகளில் குலமங்கலம், களஞ்சேரி, கூடலூர், குடமுருட்டி ஆற்றின் கரைகளில் திருவிடைமருதூர் பகுதியில் மாத்தூர், வண்டுவாஞ்சேரி, கூகூர், வலங்கைமான் வட்டத்தில் நல்லம்பூர், கோவிந்தகுடி, ஆவூர், சித்தன்வாழுர், பூண்டி ஆகிய பகுதிகளில் வாய்க்கால் கரையோரங்களிலும் அனுமதி பெறாமல் நூற்றுக்கும் அதிகமான செங்கல் சூளைகள் உள்ளன.

ஆற்றின் கரைகள் மட்டுமில்லாமல் கரையை ஒட்டியுள்ள படுகையிலும் சூளைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் பல ஆண்டுகளாக தண்ணீர் போதிய அளவு வராமல் குறைந்த அளவே வந்ததால், ஆற்றின் நீரோட்ட பாதை சுருங்கிவிட்டது.

இதனால் மீதமுள்ள ஆற்றுப்பகுதியில் தாராளமாக சூளைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக வெட்டாறு பகுதியில் ஆற்றுக்குள் சூளைகள் அதிகம் இருப்பதை காணமுடிகிறது.

இந்த செங்கல் சூளைகளில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் குடும்பம், குடும்பமாகத் தொழிலாளர்கள் பணியாற்றுவதுடன் அங்கேயே வசித்து வருகின்றனர். விவசாயத் தொழிலை விட செங்கல் சூளையில் நல்ல லாபம் கிடைப்பதால் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பலரும் இதில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து, செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளி பட்டீஸ்வரம் பாலு கூறியபோது, “நாங்கள் தை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபடுவோம். ஆயிரம் கல் அறுத்து அடுக்கிக் கொடுத்தால் ரூ.600 கூலி கிடைக்கும். செங்கல் சூளை இருக்கும் இடத்திலேயே குடிசை அமைத்து அங்கேயே இரவு- பகலாக தங்கி இந்த வேலையில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

இதுகுறித்து செங்கல் சூளை நடத்திவரும், பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறியபோது, “ஒருகாலத்தில் கள்ளச்சாராயத் தொழில் இருந்தது போல தற்போது செங்கல் சூளை தொழில் உள்ளது. மாதம் ஒரு சூளை வைத்தாலும் நல்ல வருவாய் கிடைப்பதால் கள்ளச்சாராயத் தொழிலைக் கைவிட்டவர்கள் கூட இப்போது செங்கல் சூளை தொழிலுக்கு மாறிவிட்டனர்” என்றார்.

(கும்பகோணம் அருகே தென்னூர் கிராமத்தில் திருமலைராஜன் ஆற்றின் வடக்கு கரையில் இயங்கி வரும் செங்கல் சூளைகள்.)

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கூறியபோது, “டெல்டா மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளில் 99 சதவீதம் அனுமதி பெறாதவை. பல இடங்களில் பொக்லைன் மூலம் பட்டா இடங்களிலும் பள்ளம் தோண்டி சூளைகள் அமைக்கின்றனர். ஆற்றின் கரைகளை வெட்டி அதில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே செங்கல் அறுக்கின்றனர். இதனால் கரைகள் பலவீனமடைந்து வருகின்றன. எதிர்காலத்தில் ஆற்றில் வெள்ளம் வந்தால் கரைகள் உடைப்பெடுத்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.

செங்கல் சூளைகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பொதுப்பணி, வருவாய், கனிம வளம் ஆகிய துறைகளிடம் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை. செங்கல் சூளைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிய மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் வெண்ணாறு கோட்ட கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவனிடம் கேட்டபோது, “வருவாய்த் துறையினரிடம் நத்தம் புறம்போக்கு என சான்றிதழ் வாங்கிக்கொண்டு வெட்டாறு, வெட்டாறு கரைகளில் செங்கல் சூளை அமைத்து விடுகின்றனர். அவ்வப்போது எச்சரித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். மேலும், லஸ்கர் மூலம் கண்காணித்து கரைகளைச் சேதப்படுத்தக் கூடாது, மண் எடுக்கக் கூடாது என எச்சரித்து வருகிறோம்” என்றார்.

கும்பகோணம் கோட்ட உதவி ஆட்சியர் பிரதீப்குமாரிடம் கேட்டபோது, “ஆற்றின் கரைகளில் செங்கல் சூளைகள் அனுமதியின்றி அமைப்பது தவறு. தற்போது எனது கவனத்துக்கு இந்த விவரத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள். இதுகுறித்து, வருவாய், கனிமவளம், பொதுப்பணித் துறை அதிகாரிகளை வரவழைத்து உரிய விசாரணை நடத்தி, விரைவில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மாவட்ட தலைநகரில் மட்டுமே

கனிமவளத் துறை மாவட்ட தலைநகரில் மட்டும் செயல்படுகிறது. கோட்ட, வட்ட அளவில் இதற்கு அரசு அதிகாரிகள் இல்லை. இதனால் கனிமவள அதிகாரிகளை தேடிச் செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால், அந்த துறை அதிகாரிகள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் எனக் கருதி செங்கல் சூளை நடத்துபவர்கள் தங்கள் விருப்பம் போல செயல்பட்டுவருகின்றனர். எனவே, தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டப்பட்டு வரும் கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டுமானால் இந்தத் துறைக்கு வட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x