Published : 08 Dec 2022 05:12 PM
Last Updated : 08 Dec 2022 05:12 PM
மதுரை: கரோனாவால் கணவரை இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு கிராம உதவியாளர் பணி வழங்க அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பிரிஸ்கலா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் திருப்பதி கரோனா பாதிப்பால் கடந்த 25.5.2021ல் இறந்தார். கணவர் இல்லாத நிலையில் இரு குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கரோனா பாதிப்பால் கணவரை இழந்து சிரமப்படுவோருக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக கடந்த 2021ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இதேபோல் கடந்த 1976ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் ஆதரவற்ற விதவைகளுக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளது. இதனால் தகுதிக்கேற்ற உரிய அரசு வேலை கேட்டு விண்ணப்பித்தேன். இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் என்னை அறிவுறுத்தினர்.
இதன் பேரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் எட்டயபுரம் தாலுகாவில் உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக எட்டயபுரம் வட்டாட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் முந்தைய அரசாணைகளை பின்பற்றுவது தொடர்பாக எந்த விவரமும் இல்லை. இதனிடையே கிராம உதவியாளர் பணி கேட்டு நான் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளேன்.
ஆனால், இதுவரை எந்த தகவலும் இல்லை. எனவே, ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாணை மற்றும் கரோனா பாதிப்பால் கணவரை இழந்து சிரமப்படுபவருக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்கும் அரசாணைகளின் படி எனக்கு கிராம உதவியாளர் பணி வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த னுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் தாளை முத்தரசு வாதிட்டார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''கணவரை இழந்து ஆதரவற்ற விதவையான மனுதாரர் தனக்கு கிராம உதவியாளர் பணி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆதரவற்ற விதவைக் காண முன்னுரிமை மற்றும் கரோனாவால் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களுக்கான முன்னுரிமை ஆகிய அரசாணைகளின் படி தனக்கு கிராம உதவியாளர் பணி கோரும் அரசாணைகளின் கீழ் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, கிராம உதவியாளர் பணி நியமன நடைமுறைகளை இறுதி செய்ய வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT