Published : 08 Dec 2022 01:10 PM
Last Updated : 08 Dec 2022 01:10 PM

மாண்டஸ் புயல் எதிரொலி: அதிமுக போராட்டம் ஒத்திவைப்பு

அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப்படம்

சென்னை: திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பேரூராட்சிகளில் வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த போராட்டங்களை மாண்டஸ் புயல் காரணமாக டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: "திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும்; உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 16.12.2022 – வெள்ளிக் கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x