Published : 08 Dec 2022 06:23 AM
Last Updated : 08 Dec 2022 06:23 AM
சென்னை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீடு கொண்டு வரப்பட்டு, அதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பிலான 12-வது வருடாந்திர நிதிநிலை மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டை தொடங்கிவைத்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் முடிந்துள்ளன. கரோனா நோய்த்தொற்று, கனமழை உட்பட பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தை சீராக வைத்துள்ளோம். வருவாய் பற்றாக்குறை ரூ.16 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க உகந்த மாநிலமாக 14-வது இடத்தில் இருந்த தமிழகத்தை 3-வது இடத்துக்கு முன்னேற்றியுள்ளோம். கடந்த 15 மாதங்களில் 10 பில்லியன் டாலர் முதலீட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘ஃபின்டெக்’ போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்கள் மூலம் அதிக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக குறைந்திருந்த ஜிடிபி வளர்ச்சி விகிதம் தற்போதுமீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முதலீட்டை மூன்று மடங்காகஅதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
சிஐஐ தென்மண்டல முன்னாள் தலைவர் டி.டி.அசோக், சிஐஐ ஒருங்கிணைப்பாளர் கோபால் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெட்ரோல் விலை: இதற்கிடையில், பெட்ரோல், டீசல் விலை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில், ‘கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. இங்கு வேறு ஏதோ ஒரு ‘சக்தி’ பெட்ரோல், டீசல் விலையை தீர்மானிப்பதாக தெரிகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT