Published : 08 Dec 2022 06:47 AM
Last Updated : 08 Dec 2022 06:47 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. அண்ணாமலையார் கோயிலில் பிரசித்திப் பெற்ற கார்த்திகை மாதம் மகா தீபத் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கோயிலில் நேற்று முன்தினம் அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரத்தில் அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டன. இதனை சுமார் 40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
இந்நிலையில், கார்த்திகை மாதம் பவுர்ணமி கிரிவலம் நேற்று காலை 8.14 மணிக்கு தொடங்கி இன்று காலை 9.22 மணிக்கு நிறைவடைகிறது. இரண்டாவது நாளாக நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீப விழாவை தொடர்ந்து, ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்றிரவு சந்திரசேகர் உலா நடந்தது. இரண்டாம் நாளான இன்றிரவு பராசக்தி உலா, 3-ம் நாளான நாளை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தெப்பல் உலா நடைபெறவுள்ளது. தீப விழாவின் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கிரிவலம் இன்று காலை நடைபெறவுள்ளது. 2,668 அடி உயர அண்ணாமலை மீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை வரும் 16-ம் தேதி வரை பக்தர்கள் தரிசிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT