Published : 08 Dec 2022 06:12 AM
Last Updated : 08 Dec 2022 06:12 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில், அதிக பரப்பில் பயிரிடப்படும் மக்காச்சோளத்தை, நேரடி கொள்முதல் நிலையம் மூலம் அரசு கொள்முதல் செய்வதுடன், மக்காச்சோளத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும், என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், நாட்டுச் சோளம் எனப்படும் சிவப்பு சோளம், வெள்ளைச் சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, மக்காச்சோளம் தான் பயிரிடப்படுகிறது. நடப்பு ஆண்டில், 40 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளத்தை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது, பரவலாக அறுவடை பணி தொடங்கியுள்ள நிலையில், ‘தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளான ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள விவசாயிகள், குறுகிய காலப்பயிரான மக்காச்சோளத்தை ஆடிப்பட்டத்தில் விதைக்கின்றனர். இதனால், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்யும் குறைவான மழையைக் கொண்டே மக்காச்சோளப் பயிர் வளர்ச்சியடைந்துவிடும்.
கடந்த 2 ஆண்டுகளாக, தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெய்த தொடர் மழை, படைப்புழு தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மக்காச்சோளம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மக்காச்சோளத்தை அரசு நேரடி கொள்முதல் செய்வதில்லை. எனவே, விளை நிலத்துக்கே தேடிவரும் தரகர்களிடம் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.மக்காச்சோளம் வரத்து குறைவாக இருக்கும்போது, அதற்கான விலை சற்று கூடுதலாக இருக்கும். வரத்து அதிகரிக்கத் தொடங்கியதும், மக்காச்சோளத்தின் விலை படிப்படியாக குறைக்கப்பட்டு விடும். பின்னர் கிடைத்த விலைக்கு, மக்காச்சோளத்தை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவது வழக்கமாக உள்ளது.
தற்போது, அறுவடை சீசன் தொடங்கியிருப்பதால், குவிண்டால் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகிறது. ஆனால், இதே விலை நீடித்திருக்கும் என்பது உறுதி கிடையாது.
எனவே, தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டதால், நெல் பயிரிட்டவர்கள் பயனடைந்தனர். இதே கொள்முதல் நிலையங்கள் மூலம் மக்காச்சோளத்தையும் கொள்முதல் செய்தால், நிலையான விலை கிடைத்து, விவசாயிகள் பயனடைவர்.
மேலும், மக்காச்சோளம் விளைச்சல் அதிகமாக இருப்பதால், மாவட்டத்தில் மதிப்புக் கூட்டு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதுடன், இது தொடர்பான தொழிற்சாலையையும் அமைத்தால், விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT