Published : 08 Dec 2022 05:40 AM
Last Updated : 08 Dec 2022 05:40 AM

கொருக்குப்பேட்டையில் சாலையோரம் கிடந்த 7,705 ரூபாயை போலீஸில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவிகள்: காவல் ஆணையர் பாராட்டு

சாலையோரம் கிடந்த ரூ.7,705-ஐ ஏழ்மை நிலையிலும் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 5-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவிகளான ராதிகா, நிஷா, ஏஞ்சல், காவிய ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால். உடன் வகுப்பு ஆசிரியை கலையரசி.

சென்னை: சாலையோரம் கிடந்த ரூ.7,705 பணத்தை எடுத்து, ஏழ்மை நிலையிலும் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவிகளைக் காவல்ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சென்னை கொருக்குப்பேட்டை, கார்நேஷன் நகரில் மாநகராட்சி அரசுப் பள்ளியான ‘சென்னை நடுநிலைப் பள்ளி’ உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ராதிகா, நிஷா, ஏஞ்சல், காவிய ஆகிய 4 மாணவிகள் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் 28-ம் தேதி பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அதே பகுதி ராமசாமி தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்றபோது, தெருவின் ஓரத்தில் ஒரு மணிபர்ஸ் இருந்ததைப் பார்த்துள்ளனர். அதைத் திறந்து பார்த்தபோது, அதில் ரூ.7,705 இருந்தது தெரியவரவே, 4 மாணவிகளும் அருகில் உள்ளநபர்களிடம் சென்று இது யாருடைய பணம் என விசாரித்துள்ளனர். பின்னர் இந்த மணிபர்சை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது அவர்கள் போலீஸாரிடம், "இந்த பணம் சாலையோரம் கிடந்தது. பாவம் யாரோ தவற விட்டு விட்டார்கள். அவர்கள் தற்போது கவலையாக இருப்பார்கள். எந்தஅவசரத் தேவைக்காக கொண்டுசெல்லப்பட்ட பணமோ தெரியவில்லை. எங்கள் பெற்றோர் கடினமாக உழைத்து சொற்ப அளவு பணமேசம்பாதிக்கிறார்கள். இதனால், பணத்தின் அருமை தெரியும். எனவே இதை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்" எனக் கூறினர்.

இதைக் கண்டு வியந்துபோன ஆர்.கே.நகர் போலீஸார் 4 மாணவிகளுக்கும் சாக்லெட், பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இதை அறிந்த சென்னை காவல்ஆணையர் சங்கர் ஜிவால், நேர்மையாகவும், பரிவுடனும் செயல்பட்ட மாணவிகள் ராதிகா, நிஷா, ஏஞ்சல், காவிய ஆகிய 4 பேரையும் தனது அலுவலகத்துக்கு நேற்று நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அவர்களுக்கு பாராட்டுச்் சான்றிதழோடு தலா ரூ.1000, சாக்லெட், மதிய உணவு வழங்கி மாணவிகளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மாணவிகளின் வகுப்பு ஆசிரியர் கலையரசியும் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x