Published : 07 Dec 2022 07:36 PM
Last Updated : 07 Dec 2022 07:36 PM

வனப்பகுதி மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு ரூ.2,000 கோடி சிறப்பு நிதி தேவை: மாநிலங்களவையில் கனிமொழி சோமு கோரிக்கை

மாநிலங்களவையில்திமுக எம்.பி கனிமொழி சோமு | கோப்புப் படம்

புதுடெல்லி: "வனவிலங்குகள் பாதுகாப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழக அரசின் சிறப்பான பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதி மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு 2,000 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்க வேண்டும்" என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு பேசியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. மாநிலங்களவையில் இன்று, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு பேசியது: "கடந்த 200 ஆண்டுகளில் உலகில் மனிதகுலத்தின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்து இப்போது 700 கோடி என்ற எண்ணிக்கையை நெருங்கி வந்திருக்கிறது. இன்னும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு இன்னொரு அர்த்தம் என்னவென்றால், இந்த மனிதகுலத்தின் மூலமாக இயற்கை வளங்களும் தினசரி வெகு வேகமாக அழிந்து வருகிறது என்பதுதான்.

இந்த மனித குலத்தின் வளர்ச்சி, பல்வேறு வன விலங்குகளின் இருப்பையும், வாழ்விடங்களையும் வெகுவாகப் பாதிக்கிறது. தொழில் மேம்பாடு, உணவு என மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக வன விலங்குகள் பாதிக்கப்படுவது கவலை தருகிறது. இதுதவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊடுறுவும் புதிய விலங்கினங்கள், காலநிலை மாறுபாடு, வேட்டையாடுதல் போன்ற காரணங்களாலும் விலங்கினங்கள் அழிந்து வருகின்றன.

பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இயற்கை நீர்வீழ்ச்சிகளின் எண்ணிக்கை கடந்த சில பத்தாண்டுகளில் 60 சதவிகித அளவுக்கு சுருங்கியிருப்பதாக 2018-ல் வெளிவந்த ஓர் ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. பல்வேறு உயிரினங்கள் வாழ உரிமையுள்ள இந்த உலகில் மேற்கண்ட உயிரினங்கள் அழிவதற்கு மனித இனமே காரணம். முன்னேற்றம் என்ற பெயரில் மனித குலம் காட்டும் பேராசைதான் இந்த நிலைக்கு காரணம். இந்தச் சூழலில் வனவிலங்கள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் அவசியத் தேவையாகிறது.

வனப்பகுதி உரிமைச் சட்டமும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. வனவிலங்குகளைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மலைவாழ் மக்களுக்கு வனப்பகுதியின் மீதான உரிமையைப் பாதுகாப்பதும் முக்கியம்.
வனவிலங்குகளுக்கென பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்குள் போகக் கூடாது என்று முழுமையாக தடைவிதிப்பது மலைவாழ் மக்களை பெரிதும் பாதிக்கும். அவர்களது வாழ்வாதாரமும் சீர்குலையும்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத் திருத்தங்கள், மாநில அரசுகள் இயற்றியுள்ள சட்டங்கள் மூலமாக மலைவாழ் மக்கள் அனுபவிக்கும் சலுகைகள் மற்றும் உரிமைகளைப் பறிப்பதாக அமையக் கூடாது. மலைவாழ் மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார வழ்வியல் முறைகளுக்கு குந்தகம் நேராமல் இந்தச் சட்டத் திருத்தங்கள் இருக்க வேண்டியது அவசியம்.வனப்பகுதிகளுக்கு அருகில் அமைந்த தொழிற்சாலைகள் மூலம் வெளியாகும் மாசு, வனப்பகுதில் மனிதர்களால் செய்யப்படும் ஆக்கிரமிப்புகள் போன்றவையும் வனவிலங்குகளுக்கு ஆபத்தாக உள்ள சூழ்நிலையில், அவற்றைப் பாதுகாக்க கொண்டுவரப்படும் சட்டத்திருத்தங்களை ஆதரிக்கலாம். அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு நாட்டில் ஒவ்வொரு மண்டலத்திலும் வெவ்வேறு வகையான உயிரினங்கள் வெவ்வேறு எண்ணிக்கையில் வாழ்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் வனவிலங்குகள் ஆரவல்லி மலைத் தொடர்களில் காணப்படுவதில்லை. வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருப்பதில்லை.எனவே வன விலங்குகளைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு இருப்பதே பொருத்தமாக இருக்கும். எனவே வனவிலங்குகள் தொடர்பான மேலாண்மை அமைப்புகளை அமைக்கும்போதும்; அது தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும்போதும், மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து, அவர்களது பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் அதே வேளையில், பொதுமக்களுக்கும் இதில் பொறுப்பு இருப்பதை மறுக்க முடியாது. முறைப்படுத்தப்படாத சுற்றுலா திட்டங்கள், மலைப்பகுதில் வெளியாகும் கழிவு நீர் மற்றும் அங்கு போடப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கையாள்வதில் உள்ள அலட்சியம் போன்றவையும் மலைப்பகுதி சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கிறது. பொதுமக்கள் இதை உணர்ந்து உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோர்த்து ஒத்துழைத்தால் மட்டுமே இயற்கை வளங்களைக் காக்க முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை வளங்கள் மற்றும் வன விலங்குகளின் சொர்க்க பூமியாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி திகழ்கிறது. மிகநீண்ட கடற்கரைப் பகுதியும், அதிக அளவிலான கடல் வாழ் பகுதிகளைக் கொண்டதாகவும் தமிழகம் விளங்குகிறது. எனவே இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தமிழகத்தின் பங்கு முக முக்கியமானது.

ஜவ்வாது மலை, ஏலகிரி, பலமலை சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சைமலை சிறுமலை, அழகர்மலை என தமிழகத்தின் பல்வேறு மலைப்பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதை உணர்ந்துதான், எங்களது திமுக அரசு கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சியமைத்த போதெல்லாம் பல்வேறு வனவிலங்கு சரணாலயங்கள், வன உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள் போன்றவற்றை அமைத்துள்ளது.புலிகளைப் பாதுகாப்போம் மற்றும் யானைகளைப் பாதுகாப்போம் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்காரணமாக வனவிலங்குகள் பாதுகாப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

இந்தப் பின்னணியில் தமிழக அரசின் சிறப்பான பணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் வனப்பகுதி மேம்பாட்டிற்காக தமிழக அரசுக்கு 2000 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கும்படி ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x