Published : 07 Dec 2022 12:39 PM
Last Updated : 07 Dec 2022 12:39 PM

மதுராந்தகம் சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து நபர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு வேன் மூலம் சென்று திரும்புகையில், அவர்கள் வந்த வாகனம் இன்று (டிச.7) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சந்திரசேகர் (வயது 70), சசிகுமார் (வயது 30), தாமோதரன் (வயது 28), ஏழுமலை (வயது 65), கோகுல் (வயது 33) மற்றும் சேகர் (வயது 55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்செய்தியை அறிந்தவுடன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை, சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மேலும், இவ்விபத்தில் காயமுற்று செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 4 நபர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இச்சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x