Published : 06 Dec 2022 07:41 PM
Last Updated : 06 Dec 2022 07:41 PM
சென்னை: "அடக்குமுறையை கொண்டோ, ரவுடித்தனத்தைக் கொண்டோ பாஜகவை அடக்கிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால் பாஜக அடங்க மறுத்து அடக்கி ஆளும் அத்துமீறலை முறியடிக்கும்" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அண்ணல் அம்பேத்கர் சிலைகளை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பன்முகம் கொண்ட ஒரு தேசிய தலைவர். அவரை ஒரு சாதிக்குள் அடைத்து அவரை சிறுமைப்படுத்தி கொண்டிருக்கிறார் தொல்.திருமாவளவன்.
தொடர்ந்து கடந்த இரு வருடங்களாக, அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த செல்லும் பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் செயலில் விசிகவினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதிர்காலத்தில் காவல்துறைக்கே சிக்கலை வரவழைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை தங்களின் சொந்த இடம் போல் கருதிகொண்டு அங்கே யார் செல்ல வேண்டும், யார் செல்லக்கூடாது என்று முடிவு செய்வது தாங்கள்தான் என்ற தோரணையில் விசிகவினரை அனுமதிப்பது முறையல்ல.
இன்று (டிச.6) அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு செல்ல அனுமதி கேட்டு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்ற பின்னர் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே விசிகவைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் மற்றும் கட்சியினர் அவரை தாக்க முற்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற வளாகத்திலேயே அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை எனும் நிலை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்பதையே எடுத்துகாட்டுகிறது.
அதேபோல் தூத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜகவினர் மீது விசிகவினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளதும், அதை கண்டும் காணாமல் காவல்துறையினர் வேடிக்கைப் பார்ப்பதும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சும் திமுக அரசின் போக்கையே உணர்த்துகிறது.
அடக்குமுறையை கொண்டோ, ரவுடித்தனத்தைக் கொண்டோ பாஜகவை அடக்கிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால் பாஜக அடங்க மறுத்து அடக்கி ஆளும் அத்துமீறலை முறியடிக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி, தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விசிக பாஜகவினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT