Published : 06 Dec 2022 07:01 PM
Last Updated : 06 Dec 2022 07:01 PM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாக்க உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வகை மெட்ரோ ரயில் தயாரிப்பிற்கான 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இதற்கான சிக்னல்களை அமைக்க ரூ.1620 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க சிக்னல், கட்டுப்பாடு மற்றும் காணொளி மேலாண்மை அமைப்பு நிறுவப்படவுள்ளது. தொலைத் தொடர்பு அடிப்படையில் இயங்கும் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு (communication based rail control system) மூலம் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
இந்த அமைப்பு அமைக்கப்பட்ட உடன் பல்வேறு சோதனைகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இந்த அமைப்பு ரயில்களுடன் ஒங்கிணைப்பு செய்யப்படும். இதற்கு பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்த உடன் ரயில்களை இயக்கும் பணி தொடங்கும். இந்த சிக்னல் அமைப்பு மூலம் 1.30 நிமிட இடைவெளியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்க முடியும்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT