Published : 06 Dec 2022 05:28 AM
Last Updated : 06 Dec 2022 05:28 AM
ஆ.ராசா - நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
அண்ணல் அம்பேத்கர் குறித்த, தேர்ந்த எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்பை ‘பாபா சாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் நூலாக கொண்டு வந்துள்ளது ‘இந்து தமிழ் திசை’. அரசமைப்புச் சட்டத்தின் தந்தையாகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவும் மட்டுமே பொதுத்தளத்தில் அறியப்பட்ட அல்லது சுருக்கப்பட்ட அம்பேத்கரின் பன்முகப் பரிமாணங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் முழுமையாக கருத்துச் செறிவோடு விளக்கி அவரை முழுமைப்படுத்துகின்றன.
அம்பேத்கரின் பரந்துபட்ட வாசிப்பும் - வாசிப்பின் வழியே வந்த சிந்தனை பெருவூற்றும் - அதனால் விளைந்த சமூகப் பயனும் இன்னும் பொது வெளியில் போதுமானதாக போற்றப்படவில்லை என்பதைவிட போற்ற மறுக்கும் சாதிய மனோபாவம் இத்தேசத்தில் இருப்பது எவ்வளவு அருவருப்பானது என்பதை தேசம் உணர்ந்தாக வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
‘சமத்துவமின்மை’ என்பது மொழி, இனம், நிறம், நாடு உள்ளிட்ட கூறுகளில் உலகப் பொதுதான். ஆனால் இந்தியாவில் ‘சமத்துவமின்மை’ தனித்துவம் வாய்ந்தது; இந்(து)தியமயமானது. இந்தியாவில் தத்துவ ஆசிரியர்கள் இந்தியாவை மாற்றியமைக்க முன்வராதபோது மாற்றியமைக்க தனது அறிவை, ஆற்றலை, சிந்தனை ஆளுமையை முழுமையாக அர்ப்பணித்தவர் அம்பேத்கர்.
அம்பேத்கரின் தாரக மந்திரம்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது அவரது தாரக மந்திரம். அதை “நான் பிரஞ்சுப் புரட்சியிலிருந்து எடுக்கவில்லை; பௌத்தத்திலிருந்து எடுத்தேன்” என்பது அம்பேத்கரின் கூற்று. தான் காண விரும்பிய பேதமற்ற சமுதாயத்தை பகுத்தறிவுள்ள ஒருமெய்யியல் கோட்பாட்டின் வழியில் அடைய முயன்றவர் அவர்.
‘பிராமணிய’த்தை விளக்கிய நேர்வில்கூட “நான் பிராமணியம் என்று குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட சமூகம் பெற்றுள்ள அறிவையோ, சிறப்புரிமையையோ, அந்தஸ்தையோ அல்ல. நான் பிராமணியம் என்று குறிப்பிடுவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எது எதிரியோ அதைத்தான்” என்றே பிரகடனப்படுத்தினார். ‘பிராமணியம்’ அக்ரகாரத்தில் மட்டும் வாழவில்லை - அது சமத்துவம் ஏற்காத எல்லா சாதியிலும் பரவிக் கிடக்கிறது என்பதைச் சுட்டினார்.
பொதுவாக, தன் இனம், நாடு, மொழி, சமயம் ஆகியவற்றுக்காக போராடும் தலைவர்கள், சிந்தனையாளர்கள் தாங்கள் போராடும் எல்லையோடு தங்கள் சிந்தனை வாழ்வை அமைத்துக் கொள்வர். ஆனால் அம்பேத்கர் அதையும் ஒரு கூறாகவே கொண்டார்.
நிதி - வங்கி மேலாண்மை, நீர்வளத் துறை, நதிநீர் பிரச்சினை,தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, பெண்களுக்கான சட்ட உரிமைகள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் தன்னிகரில்லா சாதனைகளை நிகழ்த்தியவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட அவர்களின் நலனுக்கு ஆணையத்தை ஏற்படுத்த அரசியல் சட்டத்தில் தனிப்பிரிவை உருவாக்கியவர். அதற்காகவே, தன் பதவியை துறந்து தன் ‘சர்வதேச சகோதரத்துவத்தை’ நிறுவியவர்.
எப்போதும் தேவைப்படுபவர்: தெற்காசியாவில் ஒரு தனிமனிதரின் நூலகம் மிகப்பெரியதென்று போற்றப்பட்ட அவரது நூலகத்தின் வழி, அவர் பெற்ற வாசிப்பின் விளைச்சல்களை இன்று ஐக்கிய நாடுகள் மன்றம் அங்கீகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் அது இன்னமும் முழுமையாக சாத்தியப்படவில்லை என்பது தேசிய அவமானமாகக் கருதப்பட வேண்டும்.
‘இந்து தேசியமே இந்திய தேசியமா’ எனும் விவாதத்துக்கு தேசம் தள்ளப்பட்டுள்ள இந்தச் சூழலில், அரசியல் சட்டத்தின் அடிப்படை பண்புகளை - மதச்சார்பின்மையை - அடிப்படை உரிமைகளை காப்பதுதான் அவருக்கு தேசம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்.
அரசியல் சட்டத்தின் முதல் வாக்கியம் ‘இந்தியர்களாகிய நாம்’ என்றே அவரால் எழுதப்பட்டது. ‘நாம்’ இந்தியர்களாக இருக்க அம்பேத்கர் எப்போதும் தேவைப்படுகிறார். அந்த தேவையை நமக்கு நன்றாக உணர்த்துகிறது ‘இந்து தமிழ் திசை’யின் ‘பாபாசாகேப் அம்பேத்கர் - ஒரு பன்முகப் பார்வை’ எனும் இந்நூல்.
- ஆ.ராசா, நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT