Published : 06 Dec 2022 05:17 AM
Last Updated : 06 Dec 2022 05:17 AM
சென்னை: கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்படும் ‘நம்ம ஊரு திருவிழா’ - பிரம்மாண்ட கலை விழாவில் நாட்டுப்புற கலைக்குழுக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகத் தமிழர்களிடையே நாட்டுப்புறக் கலைகளை கொண்டுசெல்லும் நோக்கிலும், இளம் தலைமுறையினர் நாட்டுப்புற கலைவடிவங்களின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையிலும், நாட்டுப்புற கலைக்கு அங்கீகாரம் அளிக்கவும், சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரம்மாண்ட கலைவிழாக்கள் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்பட உள்ளது.
டிச.13-க்குள் அனுப்ப வேண்டும்: இதில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து, டிச. 13-க்குள் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.
ஒரு குழுவில் இடம்பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக் கூடாது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட கலைஞர்கள் காஞ்சிபுரம் உதவி இயக்குநர் அலுவலகத்திலும், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்ட கலைஞர்கள் சேலத்திலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டத்தினர் தஞ்சாவூரிலும், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தினர் திருச்சியிலும் உள்ள உதவி இயக்குநர் அலுவலகங்களில் வழங்கலாம்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தினர் மதுரையிலும், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலியிலும், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூரிலும் உள்ள உதவி இயக்குநர் அலுவலகங்களில் தங்கள் வீடியோக்களை வழங்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT