Published : 04 Dec 2016 11:05 AM
Last Updated : 04 Dec 2016 11:05 AM
மத்திய அரசு தடை விதித்த 344 மருந்துகளை விற்பனை செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்திய பின் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.அப்துல் காதர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கேடு விளைவிப்பதாக 344 மருந்துகளை விற்பனை செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. 344 மருந்து களையும் தனித்தனியாக குறிப் பிட்டு அரசாணையும் வெளியிட்டி ருந்தது. இதனைத் தொடர்ந்து கோரக்ஸ், பென்சிடில், பிரிட்டன் போன்ற இருமல் மருந்துகள், சாரிடான், விக்ஸ் ஆக்சன் 500 போன்ற தலைவலி மாத்திரை கள். ரத்தக்கொதிப்பு மருந்துகள், சர்க்கரை நோய் மாத்திரைகள், வலி நிவாரணிகள் விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டன. இந் நிலையில், சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசின் தடையை விலக்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழகத்துக்கு பொருந்துமா என்ற குழப்பத்தில் மருந்து வணிகர்கள் உள்ளனர்.
தடையை நீக்க மறுப்பு
இது தொடர்பாக மருந்து வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:
கடந்த மார்ச் 10-ம் தேதி மத்திய அரசு அறிவித்த உடனேயே தென்னக மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தடையை நீக்க மறுத்துவிட்டது. இதேபோன்ற வழக்குகள் கர்நாடக, கேரள உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எந்த அளவுக்கு மத்திய அரசின் உத்தரவை கட்டுப்படுத்தும் என்றும் தெரியவில்லை.
எனவே டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு எந்த அளவுக்கு செல்லும் என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவு படுத்த வேண்டும். அதே நேரத்தில் இந்த குழப்பம் தீரும் வரையிலும் தமிழகத்தில் சர்ச்சைக்குரிய 344 மருந்துகளையும் விற்க வேண்டாம் என மருந்து வணிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.அப்துல் காதரிடம் கேட்ட போது, “344 மருந்துகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை, டெல்லி உயர் நீதிமன்றம் விலக்கி உத்தரவிட்டுள்ளது. இது நாடு முழு வதுக்கும் பொருந்தும்.
ஆனாலும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், மத்திய அரசு தடை விதித்த மருந்துகளை விற்பனை செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்திய பின் விரைவில் தெரிவிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT