Published : 10 Dec 2016 04:43 PM
Last Updated : 10 Dec 2016 04:43 PM

சாதி ஒழிப்புப் போராட்டமே உண்மையான மனித உரிமைப் போராட்டமாக இருக்கும்: திருமாவளவன் சிறப்பு பேட்டி

டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம்

சாதி ஒழிப்புப் போராட்டமே உண்மையான மனித உரிமைப் போராட்டமாக இருக்கும் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இதுதொடர்பாக தி இந்து இணையதளத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

மனித உரிமைகள் தினம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஒவ்வோர் ஆண்டும் பெயரளவில் கொண்டாடப்படுகிற மனித உரிமைகள் தினம், பெரியளவில் மக்களைச் சென்றடையவில்லை. சர்வதேச அளவிலும் மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு இல்லை.

இந்தியாவில் மனித உரிமைகள் எந்த அளவில் செயல்படுத்தப்படுகிறது?

இந்தியாவைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கும் மக்களுக்குமான முரண்பாடுகள் மட்டுமே மனித உரிமை மீறல்களாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காவல்துறை, சிறைத்துறையினர் பொதுமக்கள் மீது நடத்திய, நடத்துகிற வன்முறைகள் மட்டுமே மனித உரிமை மீறல்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. காவல்துறையினரின் சில கைது நடவடிக்கைகளும் பெண்கள் மீதான அடக்குமுறைகளும் இதில் அடங்கும்.

மக்கள், மக்கள் இடையேயான அடக்குமுறை

அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான உரிமை மீறல்களைப் பற்றி மட்டுமே பேசும் நாம், சக மனிதர்களுக்கிடையே நடைபெறும் அடக்குமுறைகளைப் பற்றிப் பேச மறக்கவும், மறுக்கவும் செய்கிறோம். ஜாதி, மதம், மொழி, தேசம், பாலினம் என ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்கு இடையேயான ஆதிக்கம் ஆதி காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது.

எந்த விதத்தில் சொல்கிறீர்கள்?

தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுவன் நல்ல உடை அணிந்து பள்ளிக்கு வந்தால் கிண்டல் செய்வது, சிறந்த மதிப்பெண்கள் பெற்றால் கேவலப்படுத்துவது, சாலை வழியாகச் செல்லக்கூடாது என்று கட்டுப்படுத்துவதும் அப்பட்டமான மனித உரிமை மீறல்தான்.

மொத்தத்தில் இன்றைய சூழலில், அதிகார வர்க்கமே சாதி ஆதிக்கத்தின் முன்னால் மண்டியிடுகிறது. இதனால் சாதி ஒழிப்புப் போராட்டமே மனித உரிமைப் போராட்டத்தின் முதல் அடியாக இருக்க வேண்டும்.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு உரிமை மீறல் நிகழ்த்தப்படுகிறதே?

ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான உரிமைகளை நுகரவிடாமல் செய்வதுதான் முக்கிய உரிமை மீறல். சத்தான உணவு, சுத்தமான காற்று, அறிவை அளிக்கும் படிப்பு என குடிமகனுக்குத் தேவையான அனைத்தும் அளிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

திருநங்கைகள் புறக்கணிப்பு குறித்து தொடர்ந்து பேசிவருகிறீர்கள். அதுகுறித்து...

திருநங்கைகள் பாலினம் மாறி வாழ்வது அவர்கள் செய்த பிழையில்லை. அவர்கள் செய்யாத தவறுக்காக குடும்பம் முதலில் புறக்கணிக்கிறது. குடும்பங்கள் சேர்ந்த சமூகம் அவர்களைப் புறக்கணிக்கிறது. சமூகம் சார்ந்த அரசும் அவர்களை முறையாகக் கண்டுகொள்வதில்லை. சமூக கட்டமைப்பு அவர்களின் மனித உரிமைகளை மீறி தவறாக வழிநடத்திச் செல்கிறது.

தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

ஆணையங்கள் இருப்பதே பலருக்குத் தெரியாது. அவை எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அலங்காரத்துக்காக இயங்கும் அமைப்புகள் அவை. ஆளுங்கட்சியினரைத் திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்படும் பதவிகளே ஆணையத் தலைவரும், உறுப்பினர் பதவிகளும்.

மனித உரிமைகளை மீட்டுத்தருவதில் எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுத்ததாக என் அறிவில் இல்லை. நாம் மனுக்கள் அனுப்பினால் ஆறுதலுக்காக பதில் அனுப்புவார்கள். அத்தோடு அவர்கள் வேலை முடிந்தது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று நீங்கள் மக்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

உலகில் எவ்வளவோ மதிப்புமிக்க கோட்பாடுகள் இருந்தாலும், எத்தனையோ உயர்ந்த ஜனநாயகங்கள் இருந்தாலும் எல்லாவற்றிலும் உயர்ந்தது மனிதநேயமும் மனித உரிமைகளும்தான். எல்லோரும் ஒவ்வொருவரையும் மதிக்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொண்டாலே மனிதம் தழைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x