Published : 05 Dec 2022 03:40 PM
Last Updated : 05 Dec 2022 03:40 PM
புதுச்சேரி: பள்ளிகள் திறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் இலவச மாணவர் சிறப்பு பேருந்துகள் இன்று துவங்கியது. மதிய உணவுடன் முட்டை தரும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.
மாணவர் சிறப்பு பேருந்துகள் கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுச்சேரி அரசால் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் ஒரு ரூபாய் கட்டணத்தில் பள்ளிகளுக்கு பயணிக்கலாம். கிராமத்திலிருந்து நகரிலுள்ள பள்ளிக்கு படிக்க வரும் ஏழை மாணவ, மாணவிகள் அதிகம் பயன்பெற்றனர். இரண்டு ரூபாய் மட்டுமே செலவிட்டனர். புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தால் பயனடைந்தனர்.
ஆனால், கரோனா தொற்று காரணமாக 2020ம் ஆண்டு முதல் மாணவர் சிறப்பு பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வகுப்புகள் திறக்கப்பட்டன. ஆனால் இதுவரை மாணவர் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் ஏழை குழந்தைகள் தினமும் ரூ.50 வீதம் செலவழித்து அரசு பள்ளிக்கு வந்து படிப்பது குடும்பத்துக்கு கூடுதல் சுமையானது.
புதுச்சேரியில் பெரும்பாலும் கிராமங்களில் இருந்து தனியார் பஸ்களே அதிகளவில் இயக்குவதுடன், கூடுதல் கட்டணத்தையும் செலுத்தி வருவதாகக் குறிப்பிடுகின்றனர். போக்குவரத்துத் துறையோ கூடுதல் கட்டணம் வசூலிப்பை தடுக்கவும் இல்லை. இந்நிலையில். பள்ளிகள் திறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் சிறப்பு பேருந்து இயக்குவது தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, கல்வியமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கல்வியமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில்: "ஒரு ரூபாய் பேருந்தை இலவசமாக இயக்க முடிவு எடுத்து செயல்படுத்தியுள்ளோம். புதுச்சேரி, காரைக்காலில் மாணவர் சிறப்பு பேருந்தில் இலவசமாக மாணவ, மாணவியர் பயணிக்கலாம். அத்துடன் மதிய உணவில் முட்டை இன்று முதல் தரப்படுகிறது. வாரம் இரண்டு நாட்கள் முட்டை தருகிறோம். அதை மூன்று நாளாக மாற்ற கல்வி அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுத்து செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
கல்வித் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில்: "மாணவர் சிறப்பு பேருந்துகளை இயக்க டெண்டர் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த டெண்டரை ஏற்கெனவே பேருந்துகளை இயக்கி வந்த நிறுவனமே எடுத்துள்ளது. புதுவையில் 56, காரைக்காலில் 18 என மொத்தம் 76 சிறப்பு மாணவர் பேருந்துகளை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பேருந்துகளின் எப்சி, பெர்மிட் உள்ளிட்டவற்றை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அனைத்து வழித்தடங்களிலும் இயக்க பணி ஆணை தரப்பட்டுள்ளது. இனி மாணவர் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கும்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT