Last Updated : 05 Dec, 2022 03:04 PM

26  

Published : 05 Dec 2022 03:04 PM
Last Updated : 05 Dec 2022 03:04 PM

“அதிமுக அனாதையைப் போல் ஆகிவிட்டது” - ஜெயலலிதா நினைவு தினத்தில் தொண்டர்களின் பகிர்வு

ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்ட அதிமுக தொண்டர்கள்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று. ஆளுமை மிக்க தலைவரான அவர் மறைந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜெயலலிதாவின் மறைவு அவரது தொண்டர்களை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை அறிய சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலரிடம் பேசினோம்.

ஜெயலலிதா என்ற உடன் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?

ஐஸ்ஹவுஸ் ஜீவா: அம்மா (ஜெயலலிதா) ரொம்ப கம்பீரமானவங்க. எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அம்மாவை எதிர்த்து பேச முடியாது. அம்மா பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. பெரிய பெரிய அமைச்சர்களாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் அம்மா எடுக்கும் முடிவை யாராலும் தடுக்க முடியாது. அவர் இருந்தவரை கட்சி ஒற்றுமையா இருந்தது. அவரை யாரும் எதிர்க்க முடியாது. அம்மா இருந்தவரை கட்சிக்காரங்க எல்லாருமே பயந்து இருந்தாங்க. இன்னிக்கு, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலை இருக்கு. அம்மா இருந்தவரை இப்படி இல்லை.

சம்பந்தன்: அம்மா ஏழை மக்களுக்கு நிறைய நல்லது செஞ்சாங்க. என்ன தேவையோ அதை தீர்த்து வச்சாங்க. அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம்னு நிறைய திட்டங்கள கொண்டு வந்தாங்க. மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கினாங்க. அம்மாவின் மறைவு துக்கத்தை ஏற்படுத்திடுச்சி. அனாதையைப் போல் கட்சி ஆகிடுச்சி. அம்மாவின் மறைவால் மக்களும் வேதனையில இருக்காங்க. எந்த அணிக்கு ஓட்டு போடறதுங்கற குழப்பத்தில இருக்காங்க. எல்லா அணிகளும் ஒண்ணா சேரணும். அம்மா அட்சி வரணும்.

சசிகலா பாண்டியன்: அம்மா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. எல்லாவற்றையுமே சரியா செஞ்சாங்க. மக்களுக்கு என்ன வேணுமோ அத செஞ்சாங்க. அவரை யாரும் கைநீட்டி பேச முடியாது. அவர்கிட்ட கம்பீரம் இருந்துச்சி.

ஜெயலலிதாவின் மறைவு செய்தியை முதல்முறையாக கேட்டபோது மனநிலை எப்படி இருந்தது?

ஐஸ்ஹவுஸ் ஜீவா: மிகவும் உடைஞ்சிட்டோம். அம்மாவை யாரும் குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் அம்மா நல்லது செய்வார். அம்மாதான் என்னை வட்டச் செயலாளரா அறிவிச்சாங்க. அப்போ அவரை நேரில் சந்திச்ச நினைவு இன்னமும் அப்படியே இருக்கு. அம்மா இருந்தவரை திமுகவால ஆட்சிக்கு வர முடியலை. அடுத்து நாங்கதான் வருவோம்னு திமுககாரங்க அடிக்கடி சொல்வாங்க. ஆனா அம்மாதான் வருவாங்க. அம்மாவின் மறைவுக்குப் பிறகுதான் இப்போ திமுக வந்திருக்கு. அதுவும்கூட அதிமுக பிரிஞ்சதாலதான். ஒண்ணா இருந்திருந்தா அதிமுகதான் வந்திருக்கும்.

சம்பந்தன்: நாங்க நினச்சுப் பார்க்கவேயில்லை. அப்போ நாங்க அம்மா இருந்த மருத்துவமனைக்கு வெளியேதான் இருந்தோம். அறிவிப்பு வந்தப்ப, சும்மா சொல்றாங்கனுதான் நினைச்சோம். பிறகுதான் உண்மைன்னு தெரிஞ்சது. என்னால பேசவே முடியல. அப்புறம் எங்க பகுதி கட்சி நிர்வாகிங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு, அம்மாவோட போட்டோவை பொது இடத்துல வைச்சு மாலை போட்டு வணங்கினோம்.

ஐஸ்ஹவுஸ் ஜீவா

சசிகலா பாண்டியன்: அப்போது எனக்கு ஒண்ணும் தெரியல. ஒருவேளை அப்போ நான் சின்னப் பொண்ணுங்கறதால இருக்கலாம். ஆனால், என்னோட அப்பா ரொம்பவே உடஞ்சுட்டார். அம்மாவைப் போலவே அவரும் இரும்பு மனிதர். அம்மா இறந்த மறுநாளே அவர் கீழே விழுந்துட்டார். பிறகு ராயப்பேட்டை மருத்துவமனையில் 10, 15 நாட்கள் இருந்து இறந்துட்டார். அம்மாவின் மறைவுதான் அதுக்குக் காரணம். ஏன்னா அப்போது அவருக்கு 62 வயசுதான். நல்லாதான் இருந்தார். திடீர்னு எல்லாமே முடிஞ்சுடுச்சி.

ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு இன்று என்ன செய்தீர்கள்?

ஐஸ்ஹவுஸ் ஜீவா: நாங்க எல்லோருமே ஒரே வட்டம். எங்க வட்டம் சார்பா அம்மாவோட போட்டோவுக்கு மாலை போட்டோம். 75 பேருக்கு அன்னதானம் செய்ய இருக்கோம். 100 பெண்களுக்கு புடவை கொடுக்க இருக்கோம். எங்க வட்டம் சார்பா ஒவ்வொரு வருஷமும் இதைச் செய்யறோம். எம்ஜிஆருக்கும் செய்வோம். அம்மாவுக்கும் செய்வோம்.

சம்பந்தன்

ஜெயலலிதாவின் படங்களில், பாடல்களில் உங்களுக்கு எது மிகவும் பிடிக்கும்?

ஐஸ்ஹவுஸ் ஜீவா: ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், எங்கள் தங்கம், அரச கட்டளை ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும். அம்மா நடித்த முதல் படம் ஆயிரத்தில் ஒருவன். அவர் மிகவும் கம்பீரமாக நடித்த படம் அடிமைப்பெண். எம்ஜிஆரால் மகுடம் வைக்கப்பட்ட படம் அரச கட்டளை. அம்மா ஆடிய பாடல்களைப் பொறுத்தவரை அனைத்துமே பிடிக்கும். அவரைப் போல் ஆடுவதற்கு இன்றுவரை யாரும் கிடையாது. நடிகர்கள் எல்லோருக்குமேகூட இது தெரியும். அம்மா ஒரு பெரிய டான்சர்; அவரைப் போல் யாராலும் ஆட முடியாது என நடிகர் சத்யராஜ்கூட சொல்லி இருக்கிறார்.

சசிகலா பாண்டியன்

சசிகலா பாண்டியன்: அம்மா நடித்த எல்லா படங்களுமே நன்றாக இருக்கும். அவரது நடிப்பில் குறையே சொல்ல முடியாது. அடிமைப் பெண் படத்தில் ஆடாமல் ஆடுகிறேன் என்ற பாடலுக்கு அவர் ஆடிய நடனம் நன்றாக இருக்கும். என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அதை அவர் சரியாக செய்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் சரியாக செயல்பட்டவர் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x