Published : 05 Dec 2022 07:19 AM
Last Updated : 05 Dec 2022 07:19 AM
தஞ்சாவூர்: திருவையாறில் தியாகராஜரின் 176-வது ஆண்டு ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டுக்கான ஆராதனை விழா ஜன.6-ம் தேதி, தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழா நாட்களில் பல்வேறு இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
தியாகராஜர் முக்தியடைந்த பகுளபஞ்சமி தினமான ஜன.11-ம் தேதி தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடைபெற உள்ளன.
இந்த விழாவை முன்னிட்டு, திருவையாறில் உள்ள தியாகராஜர் சமாதி முன்பாக நேற்று காலை பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிழ்ச்சியில், தியாக பிரும்ம மகோத்ஸவ சபாவின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் மற்றும் சபை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர், ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியது: தியாகராஜர் ஆராதனை விழாவை ஜன.6-ம் தேதி மாலை புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
ஜன.11-ம் தேதி நடைபெறும் நிறைவு நாள் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.
ஆளுநர்கள் இவ்விழாவுக்கு வருவதும், அவர்கள், இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விழா வழக்கமாக 5 நாட்கள் நடைபெறும்.
ஆனால, இசை ஆர்வலர்கள் பலரும் பாடுவதற்காக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக இந்தாண்டு விழா ஒரு நாள் கூடுதலாக 6 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT