Published : 04 Dec 2022 06:57 PM
Last Updated : 04 Dec 2022 06:57 PM
புதுச்சேரி: புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கியுள்ள சூழலில் ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய பாஜக அரசு இதை நிறைவேற்றுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
பிரெஞ்சு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற புதுவையை இந்திய அரசு யூனியன் பிரதேசமாக அங்கீகரித்தது. துவக்கத்தில் புதுச்சேரிக்கு மத்திய அரசின் சலுகைகள் அதிகளவில் கிடைத்தது. ஆனால், படிப்படியாக நிதி சலுகை குறையத் தொடங்கியதால் மாநில அந்தஸ்து கோரிக்கை எழத்தொடங்கியது.1998-ல் முதல்வராக ஜானகிராமன் இருந்தபோது, மாநில அந்தஸ்து குரல் ஒலிக்கத் தொடங்கியது. டெல்லிக்கு சென்று மாநில அந்தஸ்தை வலியுறுத்தினர். அது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தினர்.
இதுவரை 15-க்கும் மேற்பட்ட முறை சட்டசபையில் அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி இருந்தபோது, தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாநில அந்தஸ்து கிடைக்கும் சூழல் இருந்தது. அதுவும் இறுதியில் கைநழுவிப் போனது. இதற்கிடையில் மத்திய அரசின் நிதி 70:30 என இருந்த நிலை தலைகீழாக மாறி மாநில அரசு 70:30 என்ற நிலை ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி முதல்வர், அமைச்சரவை முடிவுகள்கூட பல சமயங்களில் அமல்படுத்த முடியாமல், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் உடனுக்குடன் எதையும் செய்ய முடியவில்லை. 2011ல் மாநில அந்தஸ்து கோரிக்கையை முதன்மையாக வைத்து ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி ஆட்சியை பிடித்தார்.
இதன்பிறகு மாநில அந்தஸ்து கோரிக்கை அனைத்து கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக மாறியது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மாநில அந்தஸ்து பெறுவோம் என அனைத்து கட்சியும் வாக்குறுதி அளித்தது.2021ல் மீண்டும் ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி முதல்வராக பொறுப்பேற்றார். ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது மீண்டும் மாநில அந்தஸ்து கோஷம் அதிகளவில் எழத்தொடங்கியுள்ளது.இதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைதியாக இருந்த மாநில அந்தஸ்து வலியுறுத்தல் தற்போது மீண்டும் உக்கிரமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.
மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள சூழலிலும் முதல்வர் ரங்கசாமி தற்போது மாநில அந்தஸ்தை வலியுறுத்தத் தொடங்கியுள்ளார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் பல முட்டுக்கட்டைகள் மாநில அந்தஸ்து இல்லாததால் ஏற்படுவதாக வெளிப்படையாக பேசத்தொடங்கியுள்ளார்.
முதல்வர் ரங்கசாமியை ஆதரிக்கும் சுயேட்சை எம்எல்ஏக்கள் நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் மாநில அந்தஸ்துக்காக பல்வேறு அமைப்புகளையும், கட்சியினரையும் மாநில அந்தஸ்துக்காக ஒருங்கிணைந்து கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர். அதையடுத்து போராட்டம் உட்பட பல்வேறு மக்கள் இயக்கங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், நாடாளுமன்றத்தில் புதுச்சேரி எம்பி கேள்வி எழுப்பியதற்கு, மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக உத்தேசம் இல்லை என்றே மத்திய அரசு பதில் தந்துள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கோரும் மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய பாஜக அரசு நிறைவேற்றுமா என்ற கேள்வியே அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT