Published : 04 Dec 2022 06:16 PM
Last Updated : 04 Dec 2022 06:16 PM
மதுரை: மதுரையில் போக்குவரத்து சிக்னல்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிச்சையெடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்திலுள்ள முக்கிய நகரங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிச்சையெடுக்கும் நபர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய உதவி செய்து அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகங்களில் தங்க வைக்கவேண்டும் என, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், ஆதரவின்றி அனாதையாக பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் பயணிகள், பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக பிச்சையெடுக்கும் நபர்கள் மீட்கப்படுகின்றனர். இதன்படி, மதுரை நகரிலும் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை மேல மடை சிக்னல் அருகே பயணிகளிடம் தொந்தரவு செய்து பணம் கேட்டதாக மதுரை சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரி (22), கல்மேடு எல்பிகே நகர் ஜெயா (24), ஆவின் சிக்னல் அருகே எல்பிகே நகர் ஏலப்பன் (40), சக்கிமங்கலம் சத்யா காலனி மேரி (20).தென்மாவட்டம், பாம்பு கோவில் சையது பட்டாணி(36), அரியலூர் மாவட்டம், மழவரோன்நல்லூர் கீர்த்திவாசன் (25), கண்ணன் (22), சக்கிமங்கலம் சாரதா (20), கல்மேடு ராணி (20), மஞ்சுளா (22), முத்துமாரி (30), மாலம்மாள் (20) உட்பட 12க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.
மனநலம் பாதித்தவர்களை காப்பகங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றும் இந்த நடவடிக்கை தொடர்ந்தது. இதன்மூலம் 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT