Published : 04 Dec 2022 05:49 PM
Last Updated : 04 Dec 2022 05:49 PM

சிவகாசி மாநகராட்சியில் காலிப்பணியிடங்கள் : நிரப்பப்படுவது எப்போது? - மக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி மாநகராட்சி அலுவலகம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் அலுவலர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.

சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது மாநகராட்சி ஆணையர் தவிர வேறெந்த புதிய அலுவலரும் நியமிக்கப்படவில்லை. திருத்தங்கல், சிவகாசி நகராட்சி அலுவலர்களே மாநகராட்சி பொறுப்புகளை கூடுதலாக கவனித்து வருகின்றனர். விருதுநகர் நகராட்சி பொறியாளருக்கு மாநகராட்சி நிர்வாக பொறியாளராக பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கணக்கர் நியமிக்கப்பட்டார். அவருக்கு மேலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உதவியாளர் நிலைக்கு மேல் 24 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மாநகராட்சி வளர்ச்சி பணிகள், ஆய்வு. அரசுக்கு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஒரு அதிகாரி விடுப்பு எடுத்தால் பொறுப்பை கவனிப்பதற்குகூட அதற்கான நிலையில் அதிகாரிகள் பணியில் இல்லாததால் பணிகளில் தேக்கம் ஏற்படுகிறது. சொத்து வரி உயர்வால் பலர் வணிக பயன்பாட்டு கட்டிடங்களை சொந்த பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். புதிய கட்டிடம் மற்றும் வகை மாற்றத்திற்கு நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் போதிய பணியாளர்கள் இல்லாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சிவகாசி மாநகராட்சிக்கு 8 உதவி ஆணையர்கள், 14 உதவி பொறியாளர்கள், நகர சுகாதார அலுவலர் மற்றும் சூப்பிரண்டுகள் என 40-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மாநகராட்சியாக தரம் உயரத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் பணியிடத்திற்கு உரிய அதிகாரிகள் நியமிக்கப்படாததால் அலுவலர்கள் மனஉளைச்சலில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூலுக்காக அலுவலர்கள் வீடு வீடாக சென்று நேரடி வரி வசூலில் ஈடுபட்டனர். மேலும் அலுவலர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொறுப்புகளை கவனிப்பதால் அலுவலர்கள் பணிச்சுமையில் சிரமப்பட்டு வருகின்றனர். மாநகராட்சியாகி ஒராண்டுக்கு மேலாகியும் உரிய அலுவலர்கள் நியமிக்கப்படாததால் அரசின் சேவைகளை விரைந்து பெற முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சிவகாசி மாநகராட்சிக்கு உரிய பணியிடங்களை ஒதுக்கீடு செய்து அதிகாரிகளை நியமிக்க வேண்டும் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- A.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x