Last Updated : 04 Dec, 2022 03:20 PM

2  

Published : 04 Dec 2022 03:20 PM
Last Updated : 04 Dec 2022 03:20 PM

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை: நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்.

புதுச்சேரி: தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு திமுக தான் தலைமை. ஆனால் புதுச்சேரியில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''குப்பை டெண்டரில் இமாலய ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறியிருந்தேன். டெண்டர் எடுத்த பெங்களூரு ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு காலம் உள்ள நிலையில் அவசர அவசரமாக டெண்டர் விடுவதற்கு காரணம் என்ன? இது சம்மந்தமாக நீதி விசாரணை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் முதல்வர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. நான் மட்டுமல்ல துறையின் அமைச்சரே இதில் ஊழல் நடந்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இவ்விவகாரத்தில் முதல்வர் அலுவலகம் தலையிடவில்லை என்றால் நீதி விசாரணைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட வேண்டும். நிறுத்தப்பட்ட டெண்டருக்கு மேல் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். கடந்த கால ஆட்சியில் புதுச்சேரியை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வழக்கறிஞர்களாக சென்னை மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் பணி அமர்த்தப்பட்டனர். இப்போது எழுத்துத்தேர்வு என்ற போர்வையில் வழக்கறிஞர்கள் நியமனம் ஆரம்பிக்கப்பட்டது.

முதல்வர் சில வழக்கறிஞர்கள் பெயர்களை பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பினார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட 35 பேரில் 15 பேர் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள். அப்படியானால் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தகுதியில்லாதவர்களா? புதுச்சேரியை சேர்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்வரின் பரிந்துரை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில் ஆளுநர் தனக்கு பங்கு இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது.

இதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும். கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை அமைக்க முதல்வர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வந்தவர்களிடம் இன்னும் கூடுதலாக 100 மதுபான கடைகள் வைக்க அனுமதி வழங்கப்போகிறோம் என்றும், என்னால் தடுக்க முடியாது என்றும் பதில் கூறியுள்ளார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் எதற்கும் வாய் திறப்பதில்லை. மவுனமே சம்மதத்துக்கு அறிகுறி. முதல்வர் ரங்கசாமி ஊழல் நடந்திக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறாரா? புதுச்சேரியில் தடுக்கி விழுந்தால் சாராயக்கடை என்ற நிலையை கொண்டு வந்தவர் ரங்கசாமி.

இதனால் இளைஞர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் சீரழிந்துள்ளன. வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. ஆகவே ரங்கசாமி பள்ளிகள், கோயில்கள், குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை கொண்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களே களத்தில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.

மணக்குள விநாயகர் கோயில் யானைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். யானை உயிரிருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தபோது கடந்த கால ஆட்சியில் தகுந்த பாதுகாப்பு கொடுத்தோம். முதல்வர் ரங்கசாமி இறந்த யானை லட்சுமிக்கு ஏன் சென்று அஞ்சலி செலுத்தவில்லை?

ரங்கசாமி மணக்குள விநாயகர் கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று ஏன் கூறுகிறார்? அவர் அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். மாற்று யானையை வாங்கி மக்கள் தரிசனத்துக்கு வைக்க வேண்டும். அதுதான் முதல்வரின் கடமை. ஆனால் அவர் தனது கடமையில் இருந்து தவறிவிட்டார்.

யானை எப்படி இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதில் அரசியல் ஒன்றும் இல்லை. இதில் ஆளுநருக்கு என்ன வந்தது. ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் செய்யட்டும்.

தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு திமுக தான் தலைமை. ஆனால் புதுச்சேரியில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x