Published : 03 Dec 2022 05:52 PM
Last Updated : 03 Dec 2022 05:52 PM

பரணி தீபம், அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க ‘பாஸ்’ கட்டாயம்: திராவிட மாடல் ஆட்சியை முன்வைத்து எளிய பக்தர்கள் மனக்குமுறல்

கோப்புப்படம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசக்க வழக்கம்போல் இந்தாண்டும் ‘பாஸ்’ கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் எளிய பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி, டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயில் தங்ககொடி மரம் முன்பு ‘ஆண் பெண் சமம்’ எனும் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக மகா தீபம் ஏற்றுவதற்கு சில விநாடிகள் முன்பாக, ‘அர்த்தநாரீஸ்வரர்’ காட்சிக் கொடுப்பார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுப்பதை வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற பக்தர்களின் விருப்பமானது, ஒவ்வொரு ஆண்டும் கானல் நீராகவே கடந்து போகிறது. திராவிட மாடல் ஆட்சியலாவது விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த அவர்களின் நம்பிக்கை தவிடுபோடியானது. ‘பாஸ்’ (PASS) வைத்துள்ளவர்களை மட்டுமே, கோயில் உள்ளே அனுமதிப்பது என மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் ‘இருகரம்’ கோத்து முடிவெடுத்துள்ளன. சிவனடியார்கள் மற்றும் எளிய பக்தர்களை வழக்கம்போல் புறக்கணித்துவிட்டு, விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்களுக்கு மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ”‘தீபத் திருவிழா அன்று கோயிலுக்கு வரும் விஐபிக்களை அழைத்து சென்று, அவர்களுக்கான இருக்கையில் அமர வைக்கும் பணியில் தொய்வு இருக்கக்கூடாது’ என உத்தரவிட்டுள்ளார். மேலும் அதே கூட்டத்தில் பங்கேற்ற பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “விஐபிகளுடன் வருபவர்களிடம் பாஸ் கேட்பது தவிர்க்கப்பட வேண்டும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் ‘பாஸ்’ இல்லாமல் பங்கேற்க கூடாது” என்றார்.

இந்நிலையில் ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, நீதிபதிகள், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள் வரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளன. இதனால், அண்ணாமலையார் கோயில் உள்ளே காவல் துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. துப்பறியும் நாய், வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை தொடர்கிறது. இதற்கிடையில், அண்ணாமலையார் கோயிலில் டிஜிபி சைலேந்திரபாபு 2 நாட்கள் ஆய்வு நடத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது அவர், பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே, கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் விஐபி, விவிஐபிக்கள் வருகையும், பாஸும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நீடிக்கும் ‘பாஸ்’ மர்மம்: விஐபி மற்றும் விவிஐபிக்களின் வருகை ஒருபுறம் இருக்க, கோயில் உள்ளே அனுமதிக்கப்படும் நபர்களுக்கான ‘பாஸ்’ எவ்வளவு அச்சிடப்பட்டுள்ளது என்ற மர்மம் நீடிக்கிறது. பரணி தீபத்துக்கு 4,000 பக்தர்களும், மகா தீபத்துக்கு 6,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் பரணி தீபத்துக்கு ரூ.500 கட்டண அனுமதி சீட்டும், மகா தீபத்துக்கு ரூ.1,100 கட்டண அனுமதி சீட்டும் என மொத்தம் ரூ.1,600 கட்டண அனுமதி சீட்டு நாளை (4-ம் தேதி) வழங்கப்படும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், ஆட்சியர் அறிவித்துள்ள எண்ணிக்கையில் மீதமுள்ள 8,400 பேருக்கு எந்தெந்த வகையில் பாஸ் வழங்கி அனுமதிக்கப்பட உள்ளனர் என்ற ரகசியம் நீடிக்கிறது. பக்தர்களுக்கான விழா என அழைக்கப்பட்டு வந்த கார்த்திகைத் தீபத் திருவிழா, திராவிட கட்சிகளின் ஆட்சியில், ‘அதிகார மையத்தின்’ விழா என்றே அழைக்கப்படுகிறது.

விடியல் பிறக்கட்டும்: இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “பரணி தீபம் மற்றும் மகா தீபத்துக்கு 10,000-க்கு அதிகமானவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இவர்களில் 10 சதவீதம் பேர் என்ற அடிப்படையில் எளிய பக்தர்களை அனுமதிக்கலாம். ஆனால் அனுமதிக்க மறுக்கின்றனர். முந்தைய ஆட்சியில் இருந்த அவல நிலை, திராவிட மாடல் ஆட்சியிலும் தொடர்கிறது. பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க ‘அதிகார பலம்’ தேவை என்ற நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டனர்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற மனநிறைவுடன் எளிய பக்தர்கள் கடந்து செல்கின்றனர். பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரரை எளிய பக்தர்களும் தரிசிக்கலாம் என்ற நிலையை உருவாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது தலைமையிலான விடியல் ஆட்சியில், எளிய பக்தர்களின் நம்பிக்கைக்கு விடியல் பிறக்கட்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x