Published : 03 Dec 2022 07:15 AM
Last Updated : 03 Dec 2022 07:15 AM

வீட்டுவசதி துறை செயலராக அபூர்வா நியமனம்: தமிழகத்தில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை

விளையாட்டுத் துறைச் செயலராக இருந்த அபூர்வா, தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் அதுல்ய மிஸ்ரா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராகவும், அத்துறையின் செயலராக இருந்தஅபூர்வா, வீட்டுவசதி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுவசதி துறை செயலராக இருந்த ஹித்தேஷ்குமார் எஸ்.மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லமுதன்மை உள்ளுறை ஆணையராகவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக சீர்திருத்த துறை செயலர்டி.ஆபிரகாம், வேளாண் துறை சிறப்பு செயலராகவும், பேரூராட்சிகள் துறை ஆணையர் ஆர்.செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில் துறை சிறப்பு செயலர் ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகத்துறை சிறப்பு செயலராகவும், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.நந்தகோபால், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராகவும், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குர்ராலா, பேரூராட்சிகள் இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சாலைப் பகுதி திட்டம்2-ன் திட்ட இயக்குநர் பி.கணேசன், நகர ஊரமைப்புத் துறை இயக்குநராகவும், அப்பதவியில் இருந்தஇ.சரவணவேல்ராஜ், வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராகவும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் அனில் மேஷ்ராம், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராகவும், வருவாய் நிர்வாக இணை ஆணையர் ஏ.ஜான் லூயிஸ், அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநராகவும், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் எம்.என்.பூங்கொடி,சேலம் சேகோசர்வ் மேலாண்இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஏ.ஜான் லூயிஸ், வருவாய் நிர்வாக இணை ஆணையர் பணியை கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சமூக நலத் துறை செயலராக இருந்த ஷம்பு கல்லோலிகர், விருப்ப ஓய்வு கோரியிருந்தார். அவரது விருப்ப ஓய்வு ஏற்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதில் தற்போது சுன்சோங்கம் ஜடக் சிரு நியமிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி என்ன? - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பொறுப்பை, செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் கூடுதலாக கவனித்து வந்தார். பெரும்பாலும் செய்தித் துறை இயக்குநர்களுக்கு இந்தப் பதவி கூடுதலாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தற்போது ஜெயசீலனிடம் இருந்துஅந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பு 4 நாட்கள் தடைபட்ட விவகாரம்தான் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னணியில்தான், சம்பந்தப்பட்ட மென்பொருள்நிறுவனம் மீண்டும் இணைப்பு வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் இணைப்பை துண்டிக்க ஜெயசீலனின் நடவடிக்கைகள்தான் காரணம் என்று தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து முதல்வருக்கு புகார்சென்ற நிலையில், பொறுப்பு பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x