Published : 03 Dec 2022 06:54 AM
Last Updated : 03 Dec 2022 06:54 AM
சென்னை: ரம்மி விளையாட்டு தொடர்பாக 6-ம் வகுப்பு பாடப் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை நீக்கும் பணியில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும் புத்தகத்தில் இந்த மாற்றம் அமலாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வியின் 6-ம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் ‘எண் தொகுப்பு’ என்ற பாடம் உள்ளது. அதில் 'ரம்மி' சீட்டுக்கட்டுகளை கொண்டு படத்துடன்அந்த கணிதப் பாடம் விளக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி விளையாட்டு தொடர்பான கருத்துகளை நீக்குவதற்கான பணிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டுள்ளது.
‘6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தற்போது உள்ள அந்த கருத்துகளை முழுமையாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வேறு விளக்கங்கள் கொடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் வழங்கப்படும் புத்தகத்தில் இந்த மாற்றம் அமலாகும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT