Published : 03 Dec 2022 06:33 AM
Last Updated : 03 Dec 2022 06:33 AM
நாகப்பட்டினம்: தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அபிநயா என்ற மாணவி 100-க்கு97 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இந்தத் தேர்வில், முதலிடம் பெற்ற மாணவி அபிநயாவுக்கு ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினர்.
மேலும், தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் இப்பள்ளி மாணவிகள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், உதவி தலைமை ஆசிரியர் பரஞ்சோதி, அறிவியல் ஆசிரியர் செந்தில் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினர், சக மாணவிகள், கிராம மக்கள் பாராட்டினர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது. கடந்த கல்வியாண்டில் இப்பள்ளி மாணவிகள் 5 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT