Published : 03 Dec 2022 04:07 AM
Last Updated : 03 Dec 2022 04:07 AM
மதுரை: ‘கரோனா’வுக்கு பிறகு மதுரை நகரில் நாய்கள் கட்டுப்பாடின்றி பெருகியதால் கடந்த 9 மாதத்தில் 1,112 குழந்தைகள் உட்பட 10,212 பேர் தெருநாய் கடிக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் தெரு நாய்கள் சுமார் 2 கோடி வரை இருக்கிறது. மதுரை மாநகராட்சியில் 2015-ம் ஆண்டு கணக்கெடுப்புபடி மதுரையில் மட்டுமே 47 ஆயிரம் தெருநாய்கள் இருந்துள்ளன. தற்போது அவை 55 ஆயிரமாக பெருகி இருப்பதாக மாநகராட்சி கூறுகிறது. ஆனால், தெருநாய்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சியில் 3 இடங்களில் கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன.
தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடுவதாக கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலும் ஒரு இடத்தில் பிடிக்கும் தெருநாய்களை அதே இடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் விடுவதில்லை. அதனாலே, தெருநாய்கள் புதிய இடங்களை பார்த்து மிரட்சி அடைந்து சாலையில் செல்வோரை பார்த்து குரைப்பதும், கடிப்பதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகளையும், நடைபயிற்சி மேற்கொள்வோரையும் துரத்தி கடிக்கின்றன.
மதுரை நகரில் மட்டும் கடந்த பிப்ரவரி முதல் அக்டோபர் வரை 9 மாதத்தில் 1,112 குழந்தைகள் உடப்ட 10,121 பேர் தெரு நாய் கடிக்கு ஆளாகி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றோரையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல், பெரும்பாலும் ஆண் நாய்களுக்கு கருத்தடை செய்வதாலேயே தெருநாய்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கரோனாவுக்கு பிறகு மக்கள் அதிகளவு வீடுகளில் முடங்கியதால் மீதமான உணவை சாலைகளில் கொட்டுவதும், அதனால் தெருநாய்கள் பல்கி பெருகியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘மாதந்தோறும் 180 நாய்களுக்கு கருத்தடை செய்கிறோம். கடந்த காலத்தை விட தற்போது தெருநாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளோம். நாய்களை துன்புறுத்துவதாலே கடிக்கின்றன. அதற்கு விழிப்புணர்வுதான் தேவை, ’’ என்றார்.
95 சதவீத நாய்கள் கடிப்பதில்லை: விலங்குகள் நல ஆர்வலர் மாரிக்குமார் கூறுகையில், இரவு தாமதமாக வருவோரையும், புதிதாக தெருக்கள், சாலைகளில் நடமாடுவோரை மட்டுமே நாய்கள் துரத்துகின்றன. 95 சதவீதம் தெருநாய்கள் தூண்டுதல் இல்லாமல் யாரையும் கடிப்பதில்லை. ஒரு சில நபர்கள் தெரு நாய்களுக்கு அந்நியப்பட்டிருந்தால் விரட்டும். சிலரது வாகனங்களில் தெருநாய்கள் மோதி உயிரிழக்கும். அதை பார்ககும் மற்ற நாய்கள் அச்சத்தில் வாகனங்களை பார்த்தாலே குரைத்து விரட்டும் மன நிலையை அடையும். மிக அரிதாகவே தெருநாய்கள் கடிக்கின்றன.
மேலும், மனஉளச்சல், துக்கத்தில் இருக்கும் தெரு நாய்கள் ஊளையிடும். நாய்கள் குரைக்கும் போது நம்மை கடித்து விடுமோ என்ற மனநிலையில் கல்லை எடுப்பதால் அவை கடித்து விடுகின்றன. நாய்கள் மனிதர்களை சார்ந்து வாழும் விலங்கு. அவற்றை பாசமாக அரவணைத்தால் உற்ற காவலனாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT