Published : 04 Dec 2016 02:13 PM
Last Updated : 04 Dec 2016 02:13 PM

120 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை கிடைக்கச் செய்த முதியவர்

குமரியின் முதல் சங்கத்தை தொடங்கி, தன்னம்பிக்கையை விதைக்கிறார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன் முதலாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை நிறுவியதோடு, தனது போராட்டங்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரமும், 120-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளார் நாகர்கோவிலை சேர்ந்த பாலகிருஷ்ணன் நாயர் (81).

`தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

என் இரண்டரை வயதில் போலியோ தாக்கி, எனது வலது கால் செயல் இழந்தது. வலது கால் முட்டியில் கையை ஊன்றி நடந்தே பியூசி படித்தேன். இப்போது போல மாற்றுத்திறனாளிகளுக்கு அப்போது இட ஒதுக்கீடோ, அங்கீகாரமோ கிடையாது. கல்வி கற்கச் செல்லும் இடத்திலும், பணிக்கு செல்லும் இடத்திலும், உடல் குறைபாட்டை சுட்டிக்காட்டி ஒதுக்கும் நிலை தான் இருந்தது. 1957-ல் 30 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். தொடர்ந்து சிண்டிகேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணி செய்தேன்.

முதல் சங்கம்

கடந்த 1985-ல் மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரி கட்ட ரூ 25 ஆயிரம் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்குரிய படிவத்தோடு விண்ணப்பித்தேன். ஆனால், நாகர்கோவில் வருமான வரி அதிகாரிகள் அதை நிராகரித்தனர். இதற்கு எப்படி தீர்வு காண்பது என தேடியபோது தான், குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கமே இல்லை என்பது தெரிய வந்தது.

எனக்கு வருமான வரி கட்டுவதில் தான் பிரச்சினை. ஆனால், பல மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமே பிரச்சினை என்பதை அறிந்தேன். உடனே குமரியில் மாற்றுத்திறனாளர்கள் சங்கத்தை ஏற்படுத்தினேன். குமரி மாவட்டத்தில் உருவான முதல் மாற்றுத் திறனாளர்கள் சங்கம் இதுதான். தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வரி விலக்கும் பெற்றேன்.

சங்கத்தின் மூலம், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, கல்வி ஆலோசனைகள், இலவச பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை செயல்படுத்தினோம்.

120 பேருக்கு வேலை

தமிழகத்தில் கடந்த 2003-ல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போது குமரி மாவட்ட ஆட்சியராக ககன் தீப்சிங் பேடி இருந்தார். குமரியில் 500 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது தேவையான கல்வித் தகுதி, கணினி அறிவுடன் உள்ள 120 மாற்றுத்திறனாளிகள் பட்டியலை சங்கத்தின் வழியாக ஆட்சியரிடம் கொடுத்தோம். முறையான தகுதி இருந்தும், வாழ்வாதாரம் இன்றி தவித்த அனைவருக்குமே வேலை கொடுத்தார். இப்போது அவர்கள் பணி நிரந்தரம் பெற்று நலமுடன் உள்ளனர்.

விருதுகள்

மாவட்ட ஆட்சியரின் சிறந்த சமூக சேவகர் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். எனது இளமைக் காலத்தில் இருந்த சூழல்கள் எல்லாம் இன்று மாறி விட்டன. மாற்றுத் திறனாளிகள் இன்று சமூக ரீதியாக மதிப்புடன் நடத்தப்படுவதாகவே நினைக்கிறேன். இருந்தும் அரசு அதிகமான தொழில் பயிற்சிகளை வழங்கி, மாற்றுத்திறனுடையோர் வேலைவாய்ப்புக்கு ஊக்குவிக்க வேண்டும். என் சமூக பணிகளுக்கும், என் மனைவி ஓமணம்மாள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இப்போதும் இங்கு தினமும் ஏராளமான மாற்றுத்திறனுடையோர் வந்து ஆலோசனை பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x